பெங்களூருவில் அடுக்குமாடி குடியிருப்பில் புகுந்து தாய்-மகள் படுகொலை
பெங்களூருவில் அடுக்குமாடி குடியிருப்புக்குள் புகுந்து தாய்-மகளை கத்தியால் குத்திக் கொலை செய்த பயங்கரம் நடந்துள்ளது. தலைமறைவாகி விட்ட மா்மநபர்களை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு:
ஆயுர்வேத மருந்து விற்பனை
பெங்களூரு பேகூரு போலீஸ் எல்லைக்கு உட்பட்ட சவுடேஷ்வரிநகரில் வசித்து வருபவர் சென்னவீரசாமி. இவரது மனைவி சந்திரகலா (வயது 38). இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. மூத்த குழந்தை விடுதியில் தங்கி படித்து வருகிறது. இரண்டாவது குழந்தையின் பெயர் ரதன்யா (வயது 4).
ஆயத்த ஆடை நிறுவனம் ஒன்றில் சென்னவீரசாமி வேலை பார்த்து வருகிறார். ஆன்லைன் மூலமாக ஆயுர்வேத பொருட்களை வாங்கி சந்திரகலா விற்பனை செய்து வந்தார். நேற்று காலையில் வழக்கம் போல சென்ன வீரசாமி வேலைக்கு புறப்பட்டு சென்று விட்டார். அப்போது சந்திரகலாவும் மகள் ரதன்யாவும் வீட்டில் இருந்தனர்.
தாய், குழந்தை கொலை
இந்த நிலையில் நேற்று மாலையில் சந்திரகலாவை பார்க்க, அவரது சகோதரி வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டிற்குள் ரத்த வெள்ளத்தில் சந்திரகலா, அவரது மகள் ரதன்யா கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு சகோதரி அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி அக்கம் பக்கத்தினர் மற்றும் சந்திரகலாவின் கணவர் சென்னவீரசாமிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் பேகூரு போலீசார் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
பின்னர் தாய் மகளின் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது சந்திரகலா அவரது குழந்தையை மர்மநபர்கள் பத்துக்கும் மேற்பட்ட முறை கத்தியால் குத்தி கொலை செய்திருப்பது தெரியவந்தது. அதே நேரத்தில் வீட்டில் இருந்த தங்க நகைகள் திருட்டு போய் இருப்பதும் தெரியவந்துள்ளது. இதனால் நகை பணத்திற்காக கொலை நடந்திருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
4 தனிப்படை அமைப்பு
இதற்கிடையில் கொலை நடந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு கிழக்கு மண்டல கூடுதல் போலீஸ் கமிஷனர் முருகன் விரைந்து வந்தார். அவர் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.
இதுகுறித்து கிழக்கு மண்டல சட்டம்-ஒழுங்கு கூடுதல் போலீஸ் கமிஷனர் முருகன் நிருபர்களிடம் கூறுகையில், பேகூரு அருகே சவுடேஷ்வரிநகரில் வசித்து வந்த ஒரு பெண், அவரது குழந்தை குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்தக் கொலையை சந்திரகலாவுக்கு தெரிந்தவர்கள் செய்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அந்தக் கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறோம். கொலையாளிகள் பற்றி முக்கிய துப்பு கிடைத்துள்ளது கொலையாளிகளை பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது தனிப்படை போலீசார் கூடியவிரைவில் கொலையாளிகளை கைது செய்வார்கள், என்றார்.
பரபரப்பு
இதற்கிடையில் சென்னவீரசாமியின் சொந்த ஊர் சித்ரதுர்கா மாவட்டம் என்றும், அவர் கடந்த சில ஆண்டுகளாக சவுடேஸ்வரி நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வசித்து வந்தது தெரியவந்துள்ளது. குடியிருப்பில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்ததில் நேற்று காலையில் ஒரு வாலிபர் சந்திரகலா வீட்டுக்கு வந்ததும், மதியம் அவர் வெளியே செல்லும் காட்சிகளும் பதிவாகி இருந்தது. அந்த நபரே இந்த இரட்டைக் கொலையை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இதுகுறித்து பேகூரு போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாகி விட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த இரட்டைக் கொலைச் சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story