மாநிலங்களுக்கு நிதியை நிறுத்தி 100 நாள் வேலை திட்டத்தை கருணை கொலை செய்கிறது: மத்திய அரசு மீது காங்கிரஸ் பாய்ச்சல்
மாநிலங்களுக்கு நிதியை நிறுத்தி, 100 நாள் வேலை திட்டத்தை மத்திய அரசு திட்டமிட்டு கருணை கொலை செய்வதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி உள்ளது.
புதுடெல்லி,
காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டம் எனப்படும் 100 நாள் வேலை திட்டத்தில், கிராம சபைகள் மூலம் சமூக தணிக்கை செய்வது அவசியம் ஆகும். ஊழலை களைவதற்காக இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
ஒவ்வொரு மாநிலமும் சுயேச்சையான சமூக தணிக்கை குழு வைத்துள்ளது. அதற்கான நிதியை மத்திய அரசே வழங்கி வருகிறது.
ஆனால், சமீபகாலமாக இந்த நிதியை வழங்குவதில் மத்திய அரசு தேவையற்ற கால தாமதம் செய்கிறது.
இதனால், சமூக தணிக்கைகள் உரிய நேரத்தில் நடப்பது இல்லை. சமூக தணிக்கைகள் சமரசம் செய்து கொள்ளப்படுகின்றன. இதை சாக்காக வைத்து, மாநிலங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்க மறுக்கிறது.
இதனால், சமூக தணிக்கை பணி மட்டுமின்றி, தொழிலாளர்களுக்கு சம்பள பட்டுவாடா ெசய்வதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம், 100 நாள் வேலை திட்டத்தை சக்கர வியூகத்தில் சிக்க வைத்து, அதை திட்டமிட்டு கருணை கொலை செய்யும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.