காஷ்மீரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை சேர்ந்த 118 பயங்கரவாதிகள்: போலீசார் தகவல்


காஷ்மீரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை சேர்ந்த 118 பயங்கரவாதிகள்: போலீசார் தகவல்
x

ஜம்மு மற்றும் காஷ்மீரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை சேர்ந்த 118 பயங்கரவாதிகள் உள்ளனர் என காவல் உயரதிகாரி தெரிவித்து உள்ளார்.


தோடா,


ஜம்மு மற்றும் காஷ்மீரில் தோடா மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு அப்துல் கய்யூம் இன்று கூறும்போது, காஷ்மீரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை சேர்ந்த 118 பயங்கரவாதிகள் உள்ளனர்.

அவர்களில் 10 பேர் பயங்கரவாத செயல்களை அந்த பகுதியில் பரப்பும் நோக்குடன், இளைஞர்களை பணியமர்த்தும் வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர் என அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார்.

அவர்களில் 2 பேர் தனிப்பட்ட முறையில் தாக்குதல்களை நடத்த கூடிய பயங்கரவாதிகள் (ஓநாய் தாக்குதல்கள்) ஆவர். மற்ற 2 பேர் அறிவிக்கப்பட்ட குற்றவாளிகள் ஆவர்.

இந்த அறிவிக்கப்பட்ட குற்றவாளிகள் 2 பேரில் ஒருவரது சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. மாவட்டத்தில் பயங்கரவாத செயல்களை பரப்ப முயற்சிப்போருக்கு எதிராக ஆவணம் தயாரிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஜம்மு மற்றும் காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பயங்கரவாதிகளை ஒழிக்கும் வேட்டையில் பாதுகாப்பு வீரர்கள் ஈடுபட்டு உள்ளனர். எனினும், பயங்கரவாதிகளுக்கு ஆயுதங்கள், தங்கும் இல்லம் போன்ற வசதிகளை உள்ளூர் மக்கள் செய்து தருவது தெரிய வந்து உள்ளது.

இதுபற்றி ஸ்ரீநகர் போலீசார் விடுத்துள்ள செய்தியில், காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் தருவதோ, தளவாடங்களை வழங்குவதோ கூடாது என அனைத்து குடிமக்களிடமும் மீண்டும் வேண்டுகோளாக கேட்டு கொள்ளப்படுகிறது.

அப்படி இல்லாமல், பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் தருவது அல்லது தளவாட உதவிகளை வழங்குவது நிரூபிக்கப்பட்டால், அவர்களின் சொத்துகளை முடக்கம் செய்வது அல்லது பறிமுதல் செய்வது முதல் கைது வரை கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்து உள்ளனர். இந்நிலையில், காஷ்மீரில் செயல்பட்டு வரும் பயங்கரவாதிகள் பற்றிய தகவலை காவல் உயரதிகாரி தெரிவித்து உள்ளார்.


Next Story