13 வயது சிறுமி கழுத்தை நெரித்து கொலை - விசாரணையில் திடுக்கிடும் தகவல்


13 வயது சிறுமி கழுத்தை நெரித்து கொலை - விசாரணையில் திடுக்கிடும் தகவல்
x
தினத்தந்தி 2 April 2024 5:55 PM IST (Updated: 2 April 2024 6:58 PM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் 13 வயது சிறுமி கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டார்.

பெங்களூரு,

கர்நாடகம் மாநிலம் ராமநகர் மாவட்டம் கனகபுரா புறநகர் கிராமத்தில் தொழிலாளி ஒருவர் வசித்து வருகிறார். அவருக்கும் 13 வயதான சிறுமிக்கும் கடந்த 2021-ம் ஆண்டு திருமணம் நடைபெற்று உள்ளது. இருவரும் காதலித்து வந்த நிலையில் திருமணம் செய்து கொண்டனர். இதுகுறித்து அதிகாரிகள் யாருக்கும் தெரியாது என கூறப்படுகிறது. இந்த தம்பதிக்கு ஒரு குழந்தையும் உள்ளது.

நாட்கள் செல்ல, செல்ல சிறுமி, கணவரிடம் இருந்து விலக தொடங்கினார். இதனால் தொழிலாளிக்கு காதல் மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. தனது மனைவிக்கு வேறு நபருடன் பழக்கம் இருக்கலாம் என நினைத்து, அவருடன் அடிக்கடி தொழிலாளி தகராறு செய்து வந்துள்ளார். இதனால் சிறுமியும் மனமுடைந்து காணப்பட்டுள்ளார். இதேபோல் கடந்த 27-ந்தேதியும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரம் அடைந்த தொழிலாளி, மனைவியை கழுத்தை நெரித்துள்ளார். இதில் அவர் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தார்.

பின்னர் அன்று இரவு முழுவதும் தனது மனைவி பிணத்துடன் தொழிலாளி தூங்கி உள்ளார். அதனை தொடர்ந்து மறுநாள் காலையில் தனது மனைவியின் உடலை அவர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அப்போது அந்த தொழிலாளி, தனது மனைவி காய்ச்சலால் அவதி அடைந்து வந்ததாகவும், தற்போது பேச்சு மூச்சு இல்லாமல் இருப்பதாகவும் தெரிவித்தார். இதையடுத்து டாக்டர்கள் அந்த சிறுமியை பரிசோதனை செய்தனர். அப்போது அவர் ஏற்கனவே உயிரிழந்து இருந்தது தெரியவந்தது. இதையடுத்து டாக்டர்கள், சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பிரேத பரிசோதனையில் சிறுமி கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரிந்தது. இதையடுத்து தகவலின்பேரில் கனகபுரா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் தொழிலாளியை கைது செய்தனர். மேலும் அவர் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மைனர் மனைவியை தொழிலாளி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story