கொடைக்கானலில் தாக்குதல் நடத்த ஐ.எஸ். ஆதரவாளர்கள் திட்டம்


கொடைக்கானலில் தாக்குதல் நடத்த ஐ.எஸ். ஆதரவாளர்கள் திட்டம்
x
தினத்தந்தி 11 Aug 2017 11:15 PM GMT (Updated: 11 Aug 2017 9:02 PM GMT)

கொடைக்கானலில் தாக்குதல் நடத்த ஐ.எஸ். பயங்கரவாத இயக்க ஆதரவாளர்கள் திட்டமிட்ட திடுக்கிடும் தகவல் தேசிய புலனாய்வு முகமை விசாரணையில் தெரியவந்தது.

புதுடெல்லி,

தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்த ஐ.எஸ். பயங்கரவாத இயக்க ஆதரவாளர்கள் 8 பேர் கேரளாவில் உள்ள நீதிபதிகள், அரசியல்வாதிகள், போலீஸ் அதிகாரிகளை கொல்ல சதித்திட்டம் தீட்டி இருப்பதாக தேசிய புலனாய்வு முகமைக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தகவல் கிடைத்தது.

அதன் பேரில் ஐ.எஸ். இயக்க ஆதரவாளர்கள் மன்சீத் மெகமூத், ஸ்வாலி முகமது, ரஷீத் அலி, சாப்வான், ஜாசிம் ஆகியோர் கேரளாவில் கைது செய்யப்பட்டனர். அதே நாளில் ரம்சத் என்பவரும் கைதானார்.

இந்த வழக்கில் தொடர்புடைய மொய்னுதீன் பாரா கடவத், அமீரகத்தில் இருந்து டெல்லிக்கு கடந்த பிப்ரவரி மாதம் நாடு கடத்தப்பட்டார். பின்னர் அவரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்தனர்.

மொய்னுதீனுடன் நடத்திய விசாரணையில், கேரளாவில் முக்கிய பிரமுகர்களை கொலை செய்ய திட்டமிட்டதுடன், கொடைக்கானலில் வெளிநாட்டினர் மீது குறிப்பாக யூதர்கள் மீது தாக்குதல் நடத்த திட்டம் தீட்டிய திடுக்கிடும் தகவல் தெரியவந்தது. அவரிடம் இருந்த செல்போன், மடிக்கணினி ஆகியவற்றில் ஐ.எஸ். இயக்கத்துடன் தொடர்பு வைத்திருந்த தகவல் கிடைத்தது.

இதையடுத்து மொய்னுதீன் மீது தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் எர்ணாகுளம் கோர்ட்டில் நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கில் மற்றொரு குற்றவாளியான சாஜீர், அமீரகம் வழியாக ஆப்கானிஸ்தானுக்கு தப்பி சென்று விட்டார். அவரை பிடிக்க அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.


Next Story