தமிழகத்தைச் சேர்ந்த கள்ளச்சாராய வியாபாரியின் ரூ.33 லட்சம் சொத்துகள் முடக்கம்

தமிழகத்தைச் சேர்ந்த கள்ளச்சாராய வியாபாரியின் ரூ.33 லட்சம் சொத்துகளை முடக்கி அமலாக்கப்பிரிவு இயக்குனரகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
புதுடெல்லி,
கள்ளச்சாராயத்தை பாட்டில்களில் அடைத்து அவற்றின் மீது போலி லேபில்களை ஒட்டி வாகனங்களில் கடத்திச் சென்ற வழக்கு தொடர்பாக, சுரேஷ் என்ற குளித்தலை சுரேஷ் குமார் என்பவர் மாமல்லபுரம் போலீசாரால் கடந்த 2015–ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். சுரேஷ் மீது மாமல்லபுரம் போலீசார் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில், மத்திய அமலாக்கப்பிரிவு போலீசார் அவர் மீது சட்ட விரோத பண பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த சட்டத்தின் கீழ் சுரேஷின் ரூ.33 லட்சம் மதிப்புள்ள ரொக்கம் மற்றும் நகைகளை முடக்கி இருப்பதாக அமலாக்கப்பிரிவு இயக்குனரகம் அறிக்கை ஒன்றில் தெரிவித்து உள்ளது. சட்ட விரோதமாக கடத்தி விற்கப்பட்ட கள்ளச்சாராயத்தின் மூலம் இந்த சொத்துகள் சேர்க்கப்பட்டதாக விசாரணையில் தெரிய வந்ததை தொடர்ந்து, மேற்கண்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.