டோக்லாமை சீனா ஆக்கிரமித்துவிட்டது என செயற்கைக்கோள் தரவுகள்; மோடி என்ன செய்தார்? காங்கிரஸ் கேள்வி


டோக்லாமை சீனா ஆக்கிரமித்துவிட்டது என செயற்கைக்கோள் தரவுகள்; மோடி என்ன செய்தார்? காங்கிரஸ் கேள்வி
x
தினத்தந்தி 18 Jan 2018 10:38 AM GMT (Updated: 18 Jan 2018 10:38 AM GMT)

டோக்லாமை சீனா ஆக்கிரமித்துவிட்டது, மோடியும், சுஷ்மாவும் தேசத்தை தவறாக வழிநடத்துகிறார்கள் என காங்கிரஸ் சாடிஉள்ளது. #Doklam #Congress #PMModi



புதுடெல்லி,

சிக்கிம் எல்லைப்பகுதியில் இந்தியா–சீனா–பூடான் நாட்டு எல்லைகள் சந்திக்கும் முச்சந்திப்பு உள்ளது. டோக்லாம் (டோங்லாங்) என அழைக்கப்படும் இந்த பகுதியில் கடந்த ஜூன் மாதம் சீனா சாலை அமைக்க முற்பட்டது. இந்திய ராணுவம் தடுத்து நிறுத்தியதும் மோதல் போக்கு 73 நாட்கள் நீடித்து பின்னர் அமைதிநிலைக்கு திரும்பியது. டோக்லாம் என்றைக்குமே எங்களுக்கு சொந்தமானது என சீனா கூறிவருகிறது. மோதல் போக்கு முடிந்த நிலையிலும் டோக்லாமில் நடப்பு சம்பவம் தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளது.

    டோக்லாமில் கடந்த 2 மாதங்களில் சீனா புதிய சாலைகளை அமைத்தது தொடர்பான செயற்கைக்கோள் புகைப்படம் டிசம்பரில் வெளியானது

இப்போது என்டிடிவி வெளியிட்டு உள்ள சிறப்பு செய்தியிலும் செயற்கைக்கோள் புகைப்பட தொகுப்பு வெளியாகி உள்ளது. டோக்லாம் பகுதி 2005-ம் ஆண்டு இருந்தது எப்படி என்பது முதல் இப்போது அங்கு உள்ள நிலை குறித்தான செயற்கைக்கோள் புகைப்படங்கள் அடங்கிய செய்தி தொகுப்பை வெளியிட்டு உள்ளது. இந்தியாவின் ராணுவ முகாம் அருகேயே சீனா ராணுவ தளம் ஒன்றை முழுவதுமாக இப்போது கட்டிமுடித்துவிட்டது என்பதை செயற்கைக்கோள் புகைப்படங்கள் காட்டுகிறது. சீனா அங்கு ஹெலிகாப்டர்களை இறக்குவது, ராணுவ தளவாடங்களை நிறுத்துவது உள்பட பல்வேறு நிலைகளுடன் பாதுகாப்பு கட்டமைப்பை எல்லைக்கு மிக அருகாமையில் முன்னெடுத்து உள்ளது என செயற்கைக்கோள் புகைப்படங்கள் காட்டுகிறது.

காங்கிரஸ் கட்சி இச்செய்தியை குறிப்பிட்டு சீனா டோக்லாமை ஆக்கிரமித்துவிட்டது, மத்திய அரசு தூங்கிக்கொண்டு இருக்கிறது என விமர்சனம் செய்து உள்ளது.

 “செயற்கைக்கோள் புகைப்படங்கள், மீடியா செய்திகள் அனைத்தும் சீனா இந்திய எல்லைக்கு மிகவும் அருகாமையில் பாதுகாப்பு கட்டமைப்பை ஏற்படுத்தி உள்ளது என்பதை காட்டுகிறது. இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் மூலோபாய நலன்கள் சமரசம் செய்யப்பட்டு உள்ளது,”என காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா கூறிஉள்ளார். டோக்லாம் பீடபூமியை சீனா ஆக்கிரமித்துவிட்டது என்பதை செயற்கைக்கோள் புகைப்படங்கள் காட்டுகிறது, இது மத்திய அரசு தூங்கிக்கொண்டு உள்ளது என்பதை காட்டுகிறது. இந்திய எல்லையில் டோக்லாம் போன்ற திட்டங்களை முன்னெடுக்க சீனா திட்டமிடுகிறது. 

தேர்தல்களில் பேசுவதற்கு தேர்ச்சி பெற்ற நம்முடைய பிரதமர், எல்லை பாதுகாப்பை உறுதிசெய்வதில் தோல்வியை தழுவிட்டார். இரண்டு பாதுகாப்பு அடுக்கை எல்லையில் சீனா உருவாக்கி உள்ளது என்பதை செயற்கைக்கோள் புகைப்படங்கள் காட்டுகிறது, 7 ஹெலிகாப்டர் இறங்கு தளம் அமைக்கப்பட்டு உள்ளது, பல்வேறு ராணுவ கட்டமைப்புகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. டோக்லாம் பகுதி முழுவதையும் சீனா ஆக்கிரமிக்கும் வரையில் அரசு என்ன செய்துக்கொண்டு இருந்தது? மத்திய அரசு, பிரதமர் மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்திற்கு இது தெரியுமா? என கேள்வியை எழுப்பி உள்ளார் சுர்ஜேவாலா. 

இருதரப்பு இடையே மோதல் போக்கு கடந்த வருடம் முடிந்த போது வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் இருதரப்பு ராணுவமும் அங்கிருந்து வெளியேறிவிட்டது என்றார். ஆனால் அதற்கு பின்னரும் எல்லையை எளிதில் நெருங்கும் வகையில் சீனா கட்டமைப்பு பணிகளை முன்னெடுத்து உள்ளது. அக்டோபர் மாதம் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி டோக்லாம் விவகாரத்தில் வெற்றி கிடைத்ததாக கூறினார். இவற்றை குறிப்பிட்டு பேசிஉள்ள சுர்ஜேவாலா, இப்போது வெளியாகி உள்ள செயற்கைக்கோள் புகைப்படங்கள் சீனா டோக்லாம் பகுதியை ஆக்கிரமித்துவிட்டது என்றுதானே காட்டுகிறது என கேள்வியை எழுப்பிஉள்ளார். 

டோக்லாம் விவகாரத்தில் மோடியும், சுஷ்மாவும் நாட்டை தவறாக வழிநடத்துகிறார்கள் என காங்கிரஸ் குற்றம் சாட்டிஉள்ளது.


Next Story