மும்பை குண்டு வெடிப்பு முக்கிய குற்றவாளி தாஹிர் டக்ளா மருத்துவமனையில் மரணம்

மும்பை குண்டு வெடிப்பு சம்பவத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முக்கிய குற்றவாளியான தாஹிர் டக்ளா மருத்துவமனையில் இன்று மரணம் அடைந்து உள்ளார். #MumbaiBlasts
மும்பை,
மும்பையில் கடந்த 1993ம் ஆண்டு தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்தன. இதில், 254 பேர் உயிரிழந்தனர். 713 பேர் பலத்த காயமடைந்தனர். இதில் ரூ.27 கோடி மதிப்பிலான சொத்துகள் சேதமடைந்தன.
இதுபற்றிய வழக்கில் குற்றவாளிகளில் ஒருவரான தாஹிர் மெர்சண்ட் என்ற தாஹிர் டக்ளா அபுதாபியில் இருந்து நாடு கடத்தப்பட்டு இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டார். அவரை சி.பி.ஐ. போலீசார் கடந்த 2010ம் ஆண்டு கைது செய்தனர். அதன்பின்னர் மரண தண்டனை விதிக்கப்பட்ட அவர் புனேயில் உள்ள எரவாடா சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், நெஞ்சு வலியால் அவதிப்பட்ட அவர் சசூன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 3.45 மணியளவில் அவர் மரணம் அடைந்து விட்டார்.
மும்பை குண்டு வெடிப்பு சம்பவங்களுக்கு மெர்சண்ட் நிதி வசதி செய்து கொடுத்துள்ளார் என்ற குற்றச்சாட்டு உள்ளது. டைகர் மேமன் மற்றும் தாவூத் இப்ராஹிம் போன்றவர்களுடனும் இவருக்கு தொடர்பு உள்ளது.