ராகுல் காந்தி வருகையை முன்னிட்டு போபால் நகரில் களை கட்டிய வரவேற்பு பேனர்கள்


ராகுல் காந்தி வருகையை முன்னிட்டு போபால் நகரில் களை கட்டிய வரவேற்பு பேனர்கள்
x
தினத்தந்தி 17 Sep 2018 6:58 AM GMT (Updated: 2018-09-17T12:28:48+05:30)

ராகுல் காந்தி வருகையை முன்னிட்டு போபால் நகரில் வழிநெடுக பேனர்களை காங்கிரஸ் தொண்டர்கள் வைத்துள்ளனர்.

போபால்,

பாரதீய ஜனதா ஆட்சி நடைபெற்று வரும் மத்தியப் பிரதேசத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு பாஜக - காங்கிரஸ் இடையே நேரடிப் போட்டி உள்ளது. அடுத்த ஆண்டு மக்களவைப் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய நான்கு மாநில சட்டப்பேரவைகளுக்கு இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் மிசோரம் தவிர மற்ற மாநிலங்களில் பாஜக ஆட்சியில் உள்ளது. 

எனவே, இந்த சட்டப்பேரவைத் தேர்தல், மக்களவைத் தேர்தலுக்கு முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது. அதிலும் பாஜகவின் கோட்டையாகக் கருதப்படும் மத்தியப் பிரதேசத்தில் வெற்றி பெற காங்கிரஸ் கூடுதல் முனைப்பு காட்டி வருகிறது. இந்த சூழலில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று முதல் தனது தேர்தல் பிரசாரத்தை துவங்குகிறார். பிரசாரத்துக்காக டெல்லியில் இருந்து விமானம் மூலம் மத்தியப் பிரதேச தலைநகர் போபாலுக்கு வரும் ராகுல் காந்தி, போபாலில் திறந்த வாகனத்தில் பயணம் மேற்கொண்டு மக்களைச் சந்திக்கிறார். அதைத் தொடர்ந்து கட்சியினருடன் உரையாடும் அவர், பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேச இருக்கிறார். 

அவரை வரவேற்கும் வகையில் வழி நெடுகிலும் தோரணங்கள், பதாகைகளை காங்கிரஸ் கட்சியினர் அமைத்துள்ளனர். சிவபக்தராக ராகுல் காந்தியை சித்தரித்து வைக்கப்பட்டு உள்ள பதாகை அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. சுமார் 18 கி.மீட்டர் தூரம் திறந்த வேனில் சென்றபடி ராகுல் காந்தி தொண்டர்களை சந்திக்க உள்ளதால், வழிநெடுக பதாகைகள் மற்றும் கொடிகள் கட்டப்பட்டுள்ளன. சுமார் ஒருலட்சம் காங்கிரஸ் தொண்டர்கள் வழிநெடுக திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், பாதுகாப்புக்காக சுமார் 2 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Next Story