எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் வக்கீல் தொழில் செய்ய தடை இல்லை - சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு


எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் வக்கீல் தொழில் செய்ய தடை இல்லை - சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 25 Sep 2018 8:36 PM GMT (Updated: 25 Sep 2018 8:36 PM GMT)

எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் வக்கீல் தொழில் செய்ய தடை இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறி விட்டது.

புதுடெல்லி,

சுப்ரீம் கோர்ட்டில் பாரதீய ஜனதா மூத்த தலைவரும், வக்கீலுமான அஷ்வினி உபாத்யாய் ஒரு பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

அந்த வழக்கில் அவர் கூறி இருந்த முக்கிய அம்சங்கள்:-

* கோர்ட்டுகளில் வக்கீல் தொழில் செய்வதற்கு எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்களுக்கு தடை விதிக்க வேண்டும்.

* அரசு ஊழியர், வக்கீல் தொழில் செய்ய முடியாது. அப்படி செய்வது இந்திய அரசியல் சாசனம் பிரிவு 14-ஐ மீறுவதாகும்.

* எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள் பல்வேறு கோர்ட்டுகளில் வக்கீல் தொழில் செய்வது, நீதித்துறைக்கும், நாடாளுமன்ற, சட்டசபைகளுக்கும் கவலை ஏற்படுத்துகிற அம்சம். ஏனென்றால், அரசு கஜானாவில் இருந்து சம்பளத்தையும், சலுகைகளையும் பெற்றுக்கொண்டும், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள் தீவிரமாக வக்கீல் தொழிலில் ஈடுபடுகின்றனர்.

* சுப்ரீம் கோர்ட்டு மற்றும் ஐகோர்ட்டு நீதிபதிகளை நீக்குவதற்கு நாடாளுமன்றத்தில் ‘இம்பீச்மென்ட்’ (பதவி நீக்க தீர்மானம்) கொண்டு வந்து, அதில் ஓட்டு போடுகிற அதிகாரத்தையும் எம்.பி.க்கள் பெற்றிருக்கிறார்கள். இவ்வாறு வழக்கில் கூறப்பட்டு இருந்தது.

இந்த வழக்கை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம். கன்வில்கர், டி.ஒய். சந்திரசூட் ஆகியோரைக் கொண்ட அமர்வு விசாரித்தது.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது மத்திய அரசின் சார்பில் வாதிடுகையில், “எம்.பி.க்களோ, எம்.எல்.ஏ.க்களோ தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் ஆவர்; அவர்கள் முழு நேர அரசு ஊழியர்கள் அல்ல; எனவே இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல” என்று கூறப்பட்டது.

ஆனால் வழக்குதாரர் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் சேகர் நாப்டே வாதிடும்போது, “அரசு கஜானாவில் இருந்துதான் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள் சம்பளம் பெறுகின்றனர். சம்பளம் பெறுகிற ஊழியர், வக்கீல் தொழில் செய்வதற்கு இந்திய பார் கவுன்சில் தடை விதித்துள்ளது” என கூறினார்.

அப்போது சுப்ரீம் கோர்ட்டு கருத்து தெரிவிக்கையில், “வேலைவாய்ப்பு என்பது முதலாளி, தொழிலாளி உறவைக் கொண்டதாகும். ஆனால் நாடாளுமன்ற உறுப்பினரின் முதலாளி இந்திய அரசு அல்ல” என்று கூறியது.

இந்த வழக்கில் கடந்த ஜூலை மாதம் 9-ந் தேதி விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் அந்த பொது நல வழக்கை தள்ளுபடி செய்து தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு நேற்று தீர்ப்பு அளித்தது.

தீர்ப்பில், “எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள் வக்கீல் தொழில் செய்யக்கூடாது என்று பார் கவுன்சில் சட்டத்தில் எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லை” என்று நீதிபதிகள் கூறி உள்ளனர். இதன்மூலம் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள் கோர்ட்டுகளில் வக்கீல்களாக பணியாற்ற எந்தத் தடையும் இல்லை என்பது தெளிவாகி விட்டது.



Next Story