சபரிமலை மறு ஆய்வு மனுக்கள் மீது அடுத்த மாதம் 13-ந் தேதி விசாரணை - சுப்ரீம் கோர்ட்டு அறிவிப்பு


சபரிமலை மறு ஆய்வு மனுக்கள் மீது அடுத்த மாதம் 13-ந் தேதி விசாரணை - சுப்ரீம் கோர்ட்டு அறிவிப்பு
x
தினத்தந்தி 23 Oct 2018 11:30 PM GMT (Updated: 2018-10-24T03:06:18+05:30)

சபரிமலை தீர்ப்பு தொடர்பான மறு ஆய்வு மனுக்கள் மீது அடுத்த மாதம் 13-ந் தேதி விசாரணை நடத்தப்படும் என சுப்ரீம் கோர்ட்டு அறிவித்தது.

புதுடெல்லி,

சபரிமலை அய்யப்பன் கோவிலில் 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்களுக்கு அனுமதி கிடையாது என்ற நிலை இருந்து வந்தது. ஆனால் இது தொடர்பான வழக்கை சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வு விசாரித்து, எல்லா வயது பெண்களையும் அனுமதித்து கடந்த மாதம் 28-ந் தேதி தீர்ப்பு அளித்தது.

இந்த தீர்ப்பை பெண்கள் அமைப்பினர் வரவேற்றாலும்கூட, பக்தர் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி தேசிய அய்யப்ப பக்தர்கள் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் ஷைலஜா விஜயன் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்களை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் கடந்த 9-ந் தேதி தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ்.கே.கவுல், கே.எம்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் முறையிடப்பட்டது. ஆனால் அதை நீதிபதிகள் ஏற்கவில்லை. ஏற்கனவே வழங்கப்பட்ட தீர்ப்புக்கு தடை விதிக்கவும் நீதிபதிகள் மறுத்தனர்.

தசரா விடுமுறைக்கு பின்னர் மறு ஆய்வு மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என அறிவித்தனர்.

இந்த நிலையில் கடந்த 17-ந் தேதி சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஐப்பசி மாத வழிபாட்டுக்காக நடை திறக்கப்பட்டது. ஐப்பசி மாத வழிபாடு முடிந்து நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) நடை சாத்தப்பட்டு விட்டது.

இந்த காலகட்டத்தில் எல்லா வயது பெண்களையும் அனுமதிக்க கூடாது என கூறி, சபரிமலை பகுதியில் பெருமளவில் போராட்டங்கள் நடைபெற்றன. 144 தடை உத்தரவு பிறப்பிக்கிற அளவுக்கு பதற்றமான சூழ்நிலை நிலவியது.

10 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட 12 பெண்கள் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்ய மேற்கொண்ட முயற்சி பலன் தரவில்லை. அவர்கள் போராட்டக்காரர்களால் தடுத்து நிறுத்தப்பட்டு, திருப்பி அனுப்பப்பட்டனர்.

இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதி எஸ்.கே.கவுல் ஆகியோரை கொண்ட அமர்வின் முன் தேசிய அய்யப்ப பக்தர்கள் சங்க தலைவர் ஷைலஜா விஜயன் சார்பில் வக்கீல் ஜே.மேத்யூ நெடும்பாரா ஆஜராகி, மறு ஆய்வு மனுக்களை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்று முறையிட்டார்.

அப்போது நீதிபதிகள், சபரிமலை அய்யப்பன் கோவிலில் எல்லா வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற தீர்ப்பினை மறுஆய்வு செய்ய கோரி தாக்கலாகி உள்ள 19 மனுக்கள் மீதும் அடுத்த மாதம் (நவம்பர்) 13-ந் தேதி பகல் 3 மணிக்கு விசாரணை நடத்தப்படும் என அறிவித்தனர்.

இந்த மறு ஆய்வு மனுக்கள், விசாரணைக்காக பட்டியலிடப்பட்டு விட்டதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

மறு ஆய்வு மனுக்கள் மீதான விசாரணை திறந்த நீதிமன்றத்தில் நடத்தப்படுவது இல்லை. நீதிபதிகள் அறையிலேயே நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story