தமிழகத்தில் ‘பிப்ரவரி 1-ந் தேதி முதல் லோக் ஆயுக்தா அமலுக்கு வரவேண்டும்’ - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு


தமிழகத்தில் ‘பிப்ரவரி 1-ந் தேதி முதல் லோக் ஆயுக்தா அமலுக்கு வரவேண்டும்’ - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 24 Oct 2018 10:30 PM GMT (Updated: 2018-10-25T02:42:03+05:30)

தமிழகத்தில் வருகிற பிப்ரவரி 1-ந் தேதி முதல் லோக் ஆயுக்தா அமைப்பை செயல்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

புதுடெல்லி,

அரசு அதிகாரிகள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்க வகை செய்யும் லோக் பால், மற்றும் லோக் ஆயுக்தா சட்டம் கடந்த 2013-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தின்படி, அனைத்து மாநிலங்களும் ஓராண்டில் லோக் ஆயுக்தா அமைப்பை ஏற்படுத்த வேண்டும். ஆனால் 20 மாநிலங்கள் மட்டுமே லோக் ஆயுக்தா அமைப்பை உருவாக்கி உள்ளன. தமிழ்நாடு, தெலுங்கானா, புதுச்சேரி, காஷ்மீர், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகலாந்து, சிக்கிம், திரிபுரா உள்ளிட்ட 12 மாநிலங்கள் இதுவரை லோக் ஆயுக்தா அமைப்பை ஏற்படுத்தவில்லை.

எனவே தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்களும் உடனடியாக லோக் ஆயுக்தா அமைப்பை நிறுவ உத்தரவிடக்கோரி அஸ்வினி உபாத்தியாயா என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.

இதேபோல் தமிழ் நாட்டில் இருந்து, திருச்சியைச்சேர்ந்த சமூக சேவகர் குருநாதன் மனுத்தாக்கல் செய்து இருந்தார்.

இந்த வழக்கு கடந்த ஏப்ரல் மாதம் 12-ந் தேதி விசாரணைக்கு வந்த போது, லோக்பால் அமைப்பை உருவாக்க காத்திருக்கிறோம், அதன் செயல்பாடு எப்படி இருக்கிறது? என்பதை பொறுத்து மாநிலங்களில் லோக் ஆயுக்தா அமைப்பு உருவாக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்தது.

இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், ‘மத்திய அரசுக்கும் இதற்கும் தொடர்பில்லை, மத்திய அரசுக்காக மாநிலங்கள் ஏன் காத்திருக்க வேண்டும், உங்களால் சுயமாக முடிவு எடுக்க முடியாதா?‘ என்று கேள்வி எழுப்பிதோடு, லோக் ஆயுக்தா அமைக்கும் பணிகளை உடனே தொடங்குமாறு உத்தரவிட்டனர்.

இந்த உத்தரவின் அடிப்படையில் கடந்த ஜூலை மாதம் 9-ந் தேதி தமிழக சட்டசபையில் லோக் ஆயுக்தா மசோதா நிறைவேற்றப்பட்டது.

இது தொடர்பான பிரமாண பத்திரத்தை மறுநாள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த தமிழக அரசு, லோக் ஆயுக்தா அமைக்க 2 மாதகால அவகாசம் கேட்டது. அதை ஏற்ற நீதிபதிகள் 2 மாதத்தில் எந்த தாமதமும் இல்லாமல் லோக் ஆயுக்தா அமைப்பை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என்று உத்தரவிட்டனர். ஆனால் 2 மாத காலத்துக்குள் லோக் ஆயுக்தா அமைக்கப்படவில்லை.

இந்த நிலையில் மேற்படி வழக்கின் விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் முன்னிலையில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி, “லோக் ஆயுக்தா அமைக்க தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கால அவகாசம் வழங்கியும் அதை தமிழக அரசு முறையாக பயன்படுத்தவில்லை” என்று வேதனை தெரிவித்தார்.

மேலும், “இதுவரை தமிழக அரசு லோக் ஆயுக்தாவை அமைக்காதது ஏன்? இன்னும் காலதாமதம் செய்ய விரும்புகிறதா?” என்றும் கேள்வி எழுப்பினார்.

அத்துடன், தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்களும் லோக் ஆயுக்தாவை அமைப்பதற்கு இதுவரை எடுத்த நடவடிக்கைகள் பற்றிய விவரங்களை மதியம் 2 மணிக்குள் கோர்ட்டில் தெரிவிக்க வேண்டும் என்று தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.

அதன்படி மதியம் மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்த போது, லோக் ஆயுக்தா அமைப்பை ஏற்படுத்தாத மாநிலங்கள் ஒவ்வொன்றும் அதற்கான விளக்கத்தை அளித்தன.

தமிழக அரசு தனது விளக்கத்தில், லோக் ஆயுக்தா அமைப்பை உருவாக்குவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும், அதற்கு இன்னும் 3 மாத காலம் கூடுதல் அவகாசம் வேண்டும் என்றும், அடுத்த ஆண்டு (2019) பிப்ரவரி முதல் வாரத்தில் லோக் ஆயுக்தா அமைப்பை உருவாக்கி விடுவோம் என்றும் தெரிவித்தது.

அதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், தமிழகத்துக்கு 3 மாதங்கள் அவகாசம் வழங்கினர். அத்துடன், தமிழகத்தில் பிப்ரவரி 1-ந் தேதி முதல் லோக் ஆயுக்தா அமைப்பு செயல்பாட்டுக்கு வர வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

இதேபோல் இந்த வழக்கில் மணிப்பூர் மாநிலத்துக்கு 3 மாதம் அவகாசம் வழங்கப்பட்டது. மேற்கு வங்காள மாநிலத்தில் 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் லோக் ஆயுக்தா அமைப்பு செயல்பாட்டுக்கு வர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

லோக் ஆயுக்தாவை ஏற்படுத்தாத பிற மாநிலங்களும் உடனடியாக லோக் ஆயுக்தாவை அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை ஒத்திவைத்தனர்.


Next Story