காஷ்மீரில் துப்பாக்கி சண்டை: பயங்கரவாதிகள் 4 பேர் பலி - ராணுவ வீரர் வீர மரணம்


காஷ்மீரில் துப்பாக்கி சண்டை: பயங்கரவாதிகள் 4 பேர் பலி - ராணுவ வீரர் வீர மரணம்
x
தினத்தந்தி 20 Nov 2018 10:45 PM GMT (Updated: 20 Nov 2018 8:20 PM GMT)

காஷ்மீரில் நடந்த துப்பாக்கி சண்டையில், பயங்கரவாதிகள் 4 பேர் பலியாயினர்.

ஸ்ரீநகர்,

காஷ்மீரில் ராணுவ வீரர்களுக்கும் பயங்கரவாதிகளுக்கு இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் பயங்கரவாதிகள் 4 பேர் பலியாகினர். ராணுவ வீரர் ஒருவர் வீர மரணம் அடைந்தார்.

காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் உள்ள நடிகாம் என்கிற இடத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்து.

அதன் பேரில் ராணுவவீரர்கள் நேற்று அதிகாலை நடிகாம் பகுதிக்கு விரைந்து அங்கு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் ராணுவ வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர்.

உடனடியாக சுதாரித்துக் கொண்ட ராணுவ வீரர்கள் பதில் தாக்குதலை தொடுத்தனர். இரு தரப்புக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை மூண்டது.

பயங்கரவாதிகள் சுட்டதில் ராணுவவீரர் ஒருவர் பலத்த காயம் அடைந்தார். உடன் இருந்த சக வீரர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் மருத்துவமனையில் அவர் பரிதாபமாக இறந்தார்.

இதற்கிடையில் ராணுவவீரர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பயங்கரவாதிகள் 4 பேர் உயிர் இழந்தனர். இதன் மூலம் நீண்ட நேரம் நீடித்த துப்பாக்கி சண்டை முடிவுக்கு வந்தது.

துப்பாக்கி சூட்டில் உயிர் இழந்த பயங்கரவாதிகள் 4 பேரும் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என்பதும், அவர்கள் சோபியான் மாவட்டத்தில் நடந்த பல்வேறு பயங்கரவாத செயல்களில் தொடர்புடையவர்கள் என்பதும் தெரியவந்தது.

தாக்குதல் நடந்த இடத்தில் இருந்து துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் உள்பட ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.

இதற்கிடையே ராணுவவீரர்களின் துப்பாக்கிச்சூட்டில் பயங்கரவாதிகள் 4 பேர் உயிர் இழந்த சம்பவம் சோபியான் மாவட்டம் முழுவதும் வேகமாக பரவியதை அடுத்து அங்குள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் அவர்கள் ரோந்து மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்புபடை வீரர்கள் மீது கற்களை வீசி எறிந்து தாக்குதல் நடத்தினர்.

சோபியான் மாவட்டம் மட்டும் இன்றி அண்டை மாவட்டமான புல்வாமாவிலும் பல்வேறு இடங்களில் இதே போன்று வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்ததாக தெரிகிறது.

இதற்கிடையே மற்றொரு சம்பவமாக அனந்த்நாக் மாவட்டத்தில் பிரிவினைவாத அமைப்பை சேர்ந்த மூத்த தலைவர் ஒருவர் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

தெரிஹ்-இ-ஹூரியத் எனப்படும் பிரிவினைவாத அமைப்பின் தலைவரான ஹசிபுல்லா மிர், தனது மனைவியுடன் நேற்று காலை வீட்டில் இருந்தார்.

அப்போது அவருடைய வீட்டுக்குள் துப்பாக்கியுடன் நுழைந்த மர்ம நபர்கள் சிலர் ஹசிபுல்லா மிர் மற்றும் அவருடைய மனைவியை சரமாரியாக சுட்டுவிட்டு தப்பி ஓடினர்.

இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த 2 பேரையும் அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி ஹசிபுல்லா மிர் இறந்தார்.



Next Story