பாதுகாப்பு படையினருடன் மோதல்: காஷ்மீர் துப்பாக்கி சண்டையில் 6 பயங்கரவாதிகள் சாவு


பாதுகாப்பு படையினருடன் மோதல்: காஷ்மீர் துப்பாக்கி சண்டையில் 6 பயங்கரவாதிகள் சாவு
x
தினத்தந்தி 23 Nov 2018 10:30 PM GMT (Updated: 2018-11-24T01:17:35+05:30)

காஷ்மீரில், பாதுகாப்பு படையினருடன் நடந்த துப்பாக்கி சண்டையில் 6 பயங்கரவாதிகள் உயிரிழந்தனர்.

ஸ்ரீநகர்,

காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடன் நடந்த துப்பாக்கி சண்டையில் 6 பயங்கரவாதிகள் உயிரிழந்தனர். அவர்கள் மறைத்து வைத்திருந்த ஏராளமான ஆயுதங்களை வீரர்கள் கைப்பற்றினர்.

காஷ்மீரில் ஆங்காங்கே மறைந்திருந்து பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டம் வகுக்கும் பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் தீவிரமாக வேட்டையாடி வருகின்றனர். அந்தவகையில் அனந்த்நாக் மாவட்டத்தின் ஷலாகுல் மற்றும் பிஜ்பெகரா பகுதிகளில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் ராணுவம், மத்திய ரிசர்வ் படை மற்றும் மாநில போலீஸ் சிறப்பு அதிரடிப்படை வீரர்கள் நேற்று அதிகாலையில் அந்த பகுதிகளை சுற்றிவளைத்து தேடுதல் வேட்டை நடத்தினர். பிஜ்பெகரா பகுதியில் ஒரு குறிப்பிட்ட இடத்தை நோக்கி வீரர்கள் முன்னேறிய போது, அங்கே பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் தானியங்கி ஆயுதங்களால் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தினர்.

உடனே வீரர்களும் பயங்கரவாதிகள் மீது திருப்பி தாக்குதல் நடத்தினர். இதனால் அங்கு கடும் துப்பாக்கி சண்டை மூண்டது. சில மணி நேரம் நீடித்த இந்த சண்டையின் முடிவில் அங்கே பதுங்கி இருந்த 6 பயங்கரவாதிகள் உயிரிழந்தனர். பின்னர் அங்கு மேலும் யாராவது பதுங்கி இருக்கிறார்களா? என்று பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை நடத்தினர்.

அப்போது பயங்கரவாதிகள் மறைத்து வைத்திருந்த ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது. உடனே அவற்றை வீரர்கள் கைப்பற்றினர். உயிரிழந்த 6 பயங்கரவாதிகளும் எந்த இயக்கத்தை சேர்ந்தவர்கள்? என்பதை கண்டறிய விசாரணை நடந்து வருகிறது.

இதற்கிடையே பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில் 6 பயங்கரவாதிகள் உயிரிழந்த சம்பவம் அனந்த்நாக் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எனவே பொதுமக்களின் போராட்டத்தை தடுக்க தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மேலும் வதந்திகள் பரவாமல் தடுக்க இணையதள சேவையும் முடக்கப்பட்டது.Next Story