ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு: ப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை விசாரணை


ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு: ப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை விசாரணை
x
தினத்தந்தி 19 Dec 2018 10:15 PM GMT (Updated: 19 Dec 2018 8:29 PM GMT)

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று முதல் முறையாக விசாரணை நடத்தினர்.

புதுடெல்லி,

காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும், எம்.பி.யுமான ப.சிதம்பரம் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முதலாவது ஆட்சிக்காலத்தில் நிதி மந்திரியாக பதவி வகித்தார். இவர் பதவியில் இருந்த போது (2007-ம் ஆண்டு) ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் அன்னிய முதலீட்டை பெறுவதற்கு அனுமதி அளித்ததில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது.

இது தொடர்பாக ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகளும் நிதி மோசடி தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு ப.சிதம்பரம் தொடர்ந்த மனுவை விசாரித்த டெல்லி ஐகோர்ட்டு, ப.சிதம்பரத்தை கைது செய்ய அடுத்த மாதம் (ஜனவரி) 15-ந் தேதி தடை விதித்தது. எனினும் இது தொடர்பான விசாரணைக்கு அவர் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டது.

அதன்படி ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு தொடர்பாக விசாரணை அதிகாரி முன் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்குமாறு ப.சிதம்பரத்துக்கு அமலாக்கத்துறை அறிவுறுத்தி இருந்தது.

இதற்காக நேற்று காலை சுமார் 11.15 மணியளவில் டெல்லி ஜாம்நகரில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ப.சிதம்பரம், தனது வக்கீலுடன் நேரில் ஆஜரானார். அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இந்த வழக்கில் ப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்துவது இதுவே முதல் முறையாகும். முன்னதாக கார்த்தி சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியதுடன், அவருக்கு சொந்தமான ரூ.54 கோடி சொத்துகளையும் முடக்கியது குறிப்பிடத்தக்கது.





Next Story