உத்தரபிரதேசத்தில் பிரியங்காவை முற்றுகையிட்ட காங்கிரசார் - ஜன அதிகார் கட்சியுடன் கூட்டணிக்கு எதிர்ப்பு


உத்தரபிரதேசத்தில் பிரியங்காவை முற்றுகையிட்ட காங்கிரசார் - ஜன அதிகார் கட்சியுடன் கூட்டணிக்கு எதிர்ப்பு
x
தினத்தந்தி 17 March 2019 10:30 PM GMT (Updated: 17 March 2019 9:05 PM GMT)

உத்தரபிரதேசத்தில் ஜன அதிகார் கட்சியுடன் அமைத்த கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரியங்காவை காங்கிரசார் முற்றுகையிட்டனர்.

லக்னோ,

உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சிகள் இணைந்து கூட்டணி அமைத்ததால், காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடும் நிலைக்கு தள்ளப்பட்டது. எனவே மாநிலத்தில் உள்ள சில சிறிய கட்சிகளுடன் அந்தக்கட்சி கூட்டணி அமைத்துள்ளது. இதில் முன்னாள் மந்திரி பாபுசிங் குஷாவாகாவின் ஜன அதிகார் கட்சியும் ஒன்று.

இந்த கட்சியுடன் கூட்டணி வைப்பதை மாநில காங்கிரசார் விரும்பவில்லை. ஊழல் வழக்கில் சிறைத்தண்டனை பெற்ற குஷாவாகாவுடன் கூட்டணி வைப்பது காங்கிரசுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் காங்கிரஸ் பொதுச்செயலாளரான பிரியங்கா நேற்று உத்தரபிரதேசம் சென்றார். லக்னோவில் கட்சி அலுவலகத்தில் அவர் ஆலோசனையில் ஈடுபட்டிருந்த போது ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் அங்கு வந்தனர்.

பின்னர் பிரியங்கா அங்கிருந்து காரில் வெளியேற முயன்ற போது, அந்த தொண்டர்கள் அவரை முற்றுகையிட்டு குஷாவாவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். சாலையில் அமர்ந்தும் அவர் கள் மறியலில் ஈடுபட்டனர். எனவே பிரியங்கா மாற்று பாதை வழியாக அங்கிருந்து வெளியேறினார். எனினும் காங்கிரஸ் தொண்டர்கள் தொடர்ந்து கோஷமிட்டவாறே அவரது காரை பின்தொடர்ந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story