ரூ.5 லட்சம் வரை வருமான வரி கிடையாது - மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு


ரூ.5 லட்சம் வரை வருமான வரி கிடையாது - மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு
x
தினத்தந்தி 6 July 2019 5:45 AM IST (Updated: 6 July 2019 3:40 AM IST)
t-max-icont-min-icon

ரூ.5 லட்சம் வரை வருமான வரி கிடையாது என்றும், வியாபாரிகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என்றும் மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது. பட்ஜெட்டை தொடர்ந்து பெட்ரோல், டீசல், தங்கம் ஆகியவற்றின் விலை உயருகிறது. மின்சார கார்களின் விலை குறைகிறது.

புதுடெல்லி,

2019-2020-ம் ஆண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட்டை (வரவு-செலவு திட்டம்) நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.

தமிழகத்தைச் சேர்ந்த அவர் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்வது இதுவே முதல் முறை ஆகும்.

நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக பாரதீய ஜனதா கூட்டணி அரசின் இடைக்கால பட்ஜெட் கடந்த பிப்ரவரி மாதம் 1-ந் தேதி தாக்கல் செய்யப்பட்ட நிலையில், 2019-2020-ம் ஆண்டுக்கான இந்த அரசின் முழுமையான பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.

பட்ஜெட் உரையை தாக்கல் செய்து பேசிய நிர்மலா சீதாராமன் பல்வேறு புதிய திட்டங்கள், வரிவிதிப்பு, வரிச்சலுகைகள் பற்றிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

பட்ஜெட் உரையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

ரூ.5 லட்சம் வரை வருமான வரி கிடையாது


* மாத சம்பளம் பெறுபவர்களை பொறுத்தமட்டில் ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்துக்கு மேல் உள்ளவர்கள் மட்டுமே வரி செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதாவது வருமான வரி செலுத்தத்தக்க வருமானம் ரூ.5 லட்சம் வரை இருந்தால் வரி கிடையாது.

* அடுத்த ஆண்டு மார்ச் 31-ந் தேதி வரை, அதிகபட்சமாக ரூ.45 லட்சம் வரை மதிப்பிலான வீடு வாங்குபவர்களுக்கு வங்கி கடனுக்கான வட்டியில் கூடுதலாக ரூ.1½ லட்சம் கழித்துக்கொள்ளலாம். தற்போது இந்த சலுகை ரூ.2 லட்சமாக உள்ளது.

கூடுதல் வரி

* நடுத்தர வர்க்கத்தினரின் வருமான வரி விகிதங்களில், அடுக்குகளில் மாற்றம் இல்லை என அறிவித்த நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், கூடுதலாக வருமானம் சம்பாதிப்பவர்கள் கூடுதலாக வரி பங்களிப்பு செய்ய வேண்டும் என்று கூறினார்.

* அந்த வகையில் ஆண்டு வருமானம் ரூ.2 கோடி முதல் ரூ.5 கோடி வரை உள்ள தனி நபர்கள் 3 சதவீதம் கூடுதல் வரியும், ரூ.5 கோடிக்கு மேல் ஆண்டு வருமானம் உள்ள தனி நபர்கள் 7 சதவீதம் கூடுதல் வரியும் செலுத்த வேண்டும்.

* வருமான வரி கணக்கு தாக்கலுக்கு வருமான வரி நிரந்தர கணக்கு எண் (பான்) இல்லாத பட்சத்தில், ஆதார் எண்ணை பயன்படுத்திக்கொள்ளலாம்.

தங்கம் விலை உயரும்

* தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரி 10 சதவீதத்தில் இருந்து 12½ சதவீதமாக உயர்த்தப்பட்டு இருப்பதால், அதன் விலை உயரும்.

* பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் மீது கூடுதலாக 1 ரூபாய் உற்பத்தி வரி விதிக்கப்பட்டு இருப்பதால் பிற வரிகளுடன் சேர்த்து பெட்ரோல் விலை லிட்டருக்கு சுமார் 2 ரூபாய் 50 காசும், டீசல் விலை லிட்டருக்கு சுமார் 2 ரூபாய் 30 காசும் உயரும்.

* சிகரெட், புகையிலை பொருட்கள், இறக்குமதி செய்யப்படும் கார், புத்தகம், வாகன பாகங்கள், ஸ்பிளிட் ஏ.சி., ஒலிபெருக்கி, சி.சி.டி.வி. கேமரா, எவர்சில்வர் பொருட்கள், பத்திரிகை காகிதம், சோப்பு தயாரிப்பதற்கான கச்சா பொருட் கள், செராமிக் டைல்ஸ் ஆகிய வற்றின் விலை உயரும்.

மின்சார கார்

* மின்சார கார்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் அதன் மீதான வரி குறைக்கப்பட்டு இருப்பதால், அவற்றின் விலை குறையும்.

* கேமரா, மொபைல் போன் சார்ஜர், செட்டாப் பாக்ஸ், இறக்குமதி செய்யப்படும் ராணுவ சாதனங்களின் விலை குறையும்.

* மாநிலங்களுக்கு குறைந்த விலையில் மின்சாரம் கிடைக்கும் வகையில் ‘ஒரே நாடு ஒரே மின் தொகுப்பு திட்டம்’ கொண்டு வரப்படும்.

வியாபாரிகளுக்கு ஓய்வூதியம்

* 2022-ம் ஆண்டுக்குள் விவசாயிகள் வருமானம் இரட்டிப்பு ஆக்கப்படும்.

* ஆண்டுக்கு ரூ.1½ கோடிக்கு குறைவாக வர்த்தகம் செய்யும் சில்லரை வியாபாரிகளுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.

* சுயஉதவி குழுவில் உள்ள ஒரு பெண்ணுக்கு ரூ.1 லட்சம் முத்ரா கடன் வழங்கப்படும். மேலும் அந்த குழுவில் உள்ள பெண்கள் ஜன்தன் வங்கி கணக்கு வைத்து இருந்தால், அதில் இருந்து கூடுதல் பற்று தொகையாக ரூ.5 ஆயிரம் பெற்றுக்கொள்ளலாம்.

* கார்ப்பரேட் என்று அழைக்கப்படுகிற பெரு நிறுவனங்களுக்கு ஆண்டு வருமானம் ரூ.250 கோடி என்றால் 25 சதவீத வரி விதிக்கப்பட்டு வந்தது. இந்த ரூ.250 கோடி என்ற வருவாய் வரம்பு பட்ஜெட்டில் ரூ.400 கோடியாக உயர்த்தப்பட்டு உள்ளது. அதாவது ஆண்டுக்கு ரூ.400 கோடி வரை வருவாய் உடைய பெரு நிறுவனங்களும் இனி 25 சதவீத வரி செலுத்தினால் போதுமானது. இதன் மூலம் 99.03 சதவீத பெரு நிறுவனங்கள் பலன் அடையும். வெறும் 0.7 சதவீத நிறுவனங்கள் மட்டுமே இந்த 25 சதவீத வரி வரம்புக்கு வெளியே இனி இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது நாட்டில் உள்ள 99.03 சதவீத நிறுவனங்கள் வரி வரம்புக்குள் வந்துவிடும்.

வங்கி கணக்கில் இருந்து பணம் எடுத்தால்...

* ஒருவர் வங்கியில் தனது நடப்பு கணக்கில் ஆண்டுக்கு ரூ.1 கோடிக்கு மேல் ‘டெபாசிட்’ செய்திருந்தால் அவர் இனி கட்டாயமாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும்.

* வங்கி கணக்கில் இருந்து ரூ.1 கோடிக்கு மேல் ரொக்கமாக எடுத்தால், 2 சதவீதம் வரி செலுத்த வேண்டும். மின்னணு பண பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

* வெளிநாட்டு பயணத்தின் போது ரூ.2 லட்சத்துக்கு மேல் செலவு செய்பவர்களும், ஆண்டுக்கு ரூ.1 லட்சம் மின்கட்டணம் செலுத்துபவர்களும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வது கட்டாயம் ஆகிறது.

அனைவருக்கும் வீடு

* 2022-ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு கட்டி தரப்படும்.

* 2024-ம் ஆண்டுக்குள் நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களில் இருக்கும் வீடுகளுக்கும் சுத்தமான குடிநீர் வழங்கப்படும்.

* அடுத்த 5 ஆண்டுகளில் நாட்டில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த சாலை, குடிநீர், சுகாதாரம், மின்சாரம் தொடர்பான திட்டங்களில் ரூ.100 லட்சம் கோடி முதலீடு செய்யப்படும்.

* உஜாலா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 35 கோடி எல்.இ.டி. பல்புகள் வழங்கப்பட்டு உள்ளன. இதன்மூலம் ரூ.18 ஆயிரத்து 341 கோடி சேமிக்கப்பட்டு உள்ளது.

மேற்கண்டவை உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் பட்ஜெட்டில் இடம் பெற்று உள்ளன.


Next Story