உ.பி.யில் பிரியங்காவை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரசார் போராட்டம்


உ.பி.யில் பிரியங்காவை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரசார் போராட்டம்
x
தினத்தந்தி 19 July 2019 11:30 PM GMT (Updated: 19 July 2019 10:35 PM GMT)

உத்தரபிரதேச மாநிலத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட பழங்குடி விவசாயிகளின் குடும்பத்தினரை சந்திக்க சென்ற பிரியங்கா காந்தியை போலீசார் தடுத்து நிறுத்து கைது செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரசார் போராட்டம் நடத்தினர்.

புதுடெல்லி,

முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தலைமையில் பாரதீய ஜனதா ஆட்சி நடைபெறும் உத்தரபிரதேச மாநிலம், சோன்பத்ரா கிராமத்தில், தாங்கள் பயிர் செய்து வந்த நிலத்தை பழங்குடி விவசாயிகள் விட்டுக் கொடுக்க மறுத்தனர்.

இதன் காரணமாக கடந்த புதன்கிழமை அவர்கள் மீது நடத்தப்பட்ட காட்டுமிராண்டித்தனமான துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் கொல்லப்பட்டனர். 28 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு, வாரணாசி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்த சம்பவம் அங்கு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்தை அரங்கேற்றியதில் முக்கிய பங்கு வகித்ததாக கருதப்படுகிற ஊர் தலைவர் யக்யா தத், அவரது சகோதரர் உள்பட 29 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த பிரச்சினை, அந்த மாநிலத்தில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து விசாரணை நடத்த கூடுதல் தலைமைச் செயலாளர் (வருவாய்) தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்படும் என அறிவித்த முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், இந்த விவகாரத்தில் ஆர்.டி.ஓ. மற்றும் 4 அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக சட்டசபையில் அறிவித்தார்.

இந்தநிலையில், காங்கிரஸ் பொதுச்செயலாளரும், உத்தரபிரதேச மாநில (கிழக்கு) பொறுப்பாளருமான பிரியங்காகாந்தி, துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை பார்த்து ஆறுதல் கூற விரும்பினார்.

இதற்காக அவர் நேற்று உத்தரபிரதேசம் சென்றார். முதலில் வாரணாசி சென்றிறங்கிய அவர், சோன்பத்ரா துப்பாக்கிச்சூட்டில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறவர்களை பார்த்து நலம் விசாரித்து ஆறுதல் கூறினார்.

அதைத் தொடர்ந்து சோன்பத்ராவுக்கு அவர் புறப்பட்டார். ஆனால் அவரை வாரணாசி-மிர்சாப்பூர் எல்லையில் உள்ள நாராயண்பூர் என்ற இடத்தில் போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

உடனே அவர் அங்கேயே நடுரோட்டில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். அவரை சுற்றிலும் காங்கிரஸ் தொண்டர்களும், பாதுகாப்பு படையினரும் சூழ்ந்தனர். இதனால் பெரும் பதற்றம் உருவானது.

அப்போது பிரியங்கா, “பாதிக்கப்பட்ட குடும்பங் களை பார்க்க விரும்பினேன். என் மகன் வயதில் உள்ளவர் சுடப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். எந்த சட்டத்தின் அடிப்படையில் என்னை தடுத்து நிறுத்தி இருக்கிறீர்கள் என்பதை சொல் லுங்கள்” என கூறினார்.

மேலும், “4 பேருடன் கூட நான் முன்னேறிச் செல்ல முடியும். ஈவு இரக்கம் இல்லாமல் சுட்டுக்கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களை நான் பார்க்க விரும்புகிறேன்” என கூறினார்.

அதன் பின்னர் அவரை போலீசார் அருகில் உள்ள சுனார் விருந்தினர் மாளிகைக்கு அழைத்துச் சென்று காவலில் வைத்தனர்.

பிரியங்கா சட்டத்துக்கு புறம்பாக கைது செய்யப்பட்டுள்ளார் என அவரது சகோதரர் ராகுல் காந்தி குற்றம் சாட்டி கண்டனம் வெளியிட்டுள்ளார். இதையொட்டி டுவிட்டரில் அவர் வெளியிட்ட பதிவில், “உத்தரபிரதேச மாநிலம், சோன்பத்ராவுக்கு செல்லும் வழியில் பிரியங்கா சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டிருப்பது வருத்தம் அளிக்கிறது. அதிகாரத்தை தன்னிச்சையாக பயன்படுத்துவது உத்தரபிரதேசத்தில் பாரதீய ஜனதா அரசின் அதிகரித்து வரும் பாதுகாப்பின்மையை காட்டுகிறது” என கூறி உள்ளார்.

உ.பி. மேற்கு பகுதி பொறுப்பாளராக உள்ள காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜோதிர் ஆதித்யசிந்தியாவும் பிரியங்காவை தடுத்து நிறுத்தி கைது செய்த மாநில அரசை சாடினார்.

பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டிருப்பதை கண்டித்து போராட்டம் நடத்துமாறு காங்கிரஸ் மேலிடம் கேட்டுக்கொண்டது.

இதையடுத்து பரவலாக பல்வேறு இடங்களில் காங்கிரசார் போராட்டத்தில் குதித்தனர். மும்பையில் மராட்டிய மாநில காங்கிரஸ் தலைவர் பாலாசாகேப் தொராட் தலைமையில் போராட்டம் நடந்தது.

டெல்லியில் பாரதீய ஜனதா தலைமையகம் முன்பாக காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டம் நடத்தினர். டெல்லி காங்கிரஸ் செயல் தலைவர் ஆரூண் யூசுப் தலைமையில் திரண்ட அந்த கட்சி தொண்டர்கள் உத்தரபிரதேச மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தின் உருவபொம்மையை எரித்தனர்.


Next Story
  • chat