3 முறை டெல்லி முதல்-மந்திரியாக இருந்தவர் ஷீலா தீட்சித் மரணம்: ஜனாதிபதி, பிரதமர் மோடி, ராகுல் காந்தி இரங்கல்


3 முறை டெல்லி முதல்-மந்திரியாக இருந்தவர் ஷீலா தீட்சித் மரணம்: ஜனாதிபதி, பிரதமர் மோடி, ராகுல் காந்தி இரங்கல்
x
தினத்தந்தி 20 July 2019 11:30 PM GMT (Updated: 20 July 2019 10:46 PM GMT)

3 முறை டெல்லி முதல்-மந்திரியாக இருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ஷீலா தீட்சித் நேற்று மதியம் மரணம் அடைந்தார். ஜனாதிபதி, பிரதமர் உள்பட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

புதுடெல்லி,

டெல்லி மாநில காங்கிரஸ் தலைவராக இருந்துவந்தவர் ஷீலா தீட்சித். காங்கிரஸ் மூத்த தலைவரான அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு டெல்லியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அங்கு நேற்று மதியம் 3.55 மணிக்கு ஷீலா தீட்சித் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 81.

ஷீலா தீட்சித் முதல் முறையாக 1984-ம் ஆண்டு உத்தரபிரதேச மாநிலம் கன்னுஜ் மக்களவை தொகுதியில் இருந்து எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். ராஜீவ் காந்தி மந்திரிசபையில் அவர் மத்திய மந்திரியாகவும் பணியாற்றினார்.

பின்னர் 1998-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரை 15 ஆண்டுகள் தொடர்ந்து 3 முறையாக டெல்லி முதல்-மந்திரியாக இருந்தார். கேரள மாநில கவர்னராகவும் பணியாற்றி உள்ளார். சமீபத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் வடக்கு-கிழக்கு டெல்லி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிவாய்ப்பை இழந்தார்.

ஷீலா தீட்சித் மறைவு குறித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், “ஷீலா தீட்சித் மரணமடைந்தார் என்ற செய்தி வருத்தத்தை அளிக்கிறது. அவரது பதவிக்காலத்தில் தலைநகரில் ஏற்படுத்திய மாற்றங்கள் மூலம் அவர் அனைவரது நினைவிலும் நீடித்து இருப்பார்” என்று தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி டுவிட்டரில், “ஷீலா தீட்சித் மரணமடைந்ததற்கு ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன். அவர் மிகுந்த அன்பும், இனிமையான தன்மையும் கொண்டவர். டெல்லியின் மேம்பாட்டுக்கு அவர் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்துள்ளார்” என்று கூறியுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, “ஷீலா தீட்சித் மரணமடைந்துவிட்டார் என்ற செய்தியை கேட்டதும் நான் மிகவும் வேதனை அடைந்துள்ளேன். காங்கிரஸ் கட்சியின் அன்பு மகள் அவர். தனிப்பட்ட முறையிலும் அவருடன் நான் நெருங்கி பழகி இருக்கிறேன். அவரது குடும்பத்தினருக்கும், டெல்லி மக்களுக்கும் எனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். 3 முறை டெல்லி முதல்-மந்திரியாக தன்னலமின்றி பணியாற்றினார்” என்று கூறியுள்ளார்.

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்-மந்திரி அமரிந்தர்சிங், ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட், மேற்குவங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி உள்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், “டெல்லி வளர்ச்சிக்காக பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றியவர் ஷீலா தீட்சித். அவரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும், காங்கிரஸ் பேரியக்கத்தினருக்கும் அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறேன்” என கூறி உள்ளார்.

இதேபோன்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, திருநாவுக்கரசர், பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


Next Story