கார் ஏற்றி பத்திரிகையாளரை கொன்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு போலீஸ் கண்காணிப்பில் சிகிச்சை


கார் ஏற்றி பத்திரிகையாளரை கொன்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு போலீஸ் கண்காணிப்பில் சிகிச்சை
x
தினத்தந்தி 4 Aug 2019 7:46 PM GMT (Updated: 4 Aug 2019 7:46 PM GMT)

கார் ஏற்றி பத்திரிகையாளரை கொன்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு, போலீஸ் கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலத்தில் நில அளவை இயக்குனராக சமீபத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஸ்ரீராம் வெங்கிடராமன் நியமிக்கப்பட்டார். இவர் நேற்றுமுன்தினம் இரவு, திருவனந்தபுரத்தில் ஒரு விருந்தில் பங்கேற்று விட்டு, காரை வேகமாக ஓட்டிச் சென்று கொண்டிருந்தார். அப்போது, வழியில் அவரது கார் மோதி, மலையாள நாளிதழ் ஒன்றின் பத்திரிகையாளர் முகமது பஷீர் (வயது 35) என்பவர் பலியானார்.

இதுதொடர்பாக, ஜாமீனில் விட முடியாத பிரிவுகளின் கீழ், ஸ்ரீராம் கைது செய்யப்பட்டார். அப்போது, ஸ்ரீராம் மது அருந்தி இருந்ததாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

விபத்தில் கையில் காயம் அடைந்ததாக ஐ.ஏ.எஸ். அதிகாரி ஸ்ரீராம், ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ஆஸ்பத்திரிக்கு மாஜிஸ்திரேட் நேரில் சென்று அவரை 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். பின்னர், ஸ்ரீராம் மது அருந்தி இருந்தாரா என்பதை கண்டறிய அவரது ரத்த மாதிரியை எடுத்து பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், ஸ்ரீராம் நேற்றும் ஆஸ்பத்திரியில்தான் இருந்தார். அவர் அனுமதிக்கப்பட்டுள்ள அறைக்கு வெளியே 3 போலீசார் காவலுக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.

குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டால், ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு 10 ஆண்டுவரை ஜெயில் தண்டனை கிடைக்கும் என்று தெரிகிறது.

Next Story