கேரளாவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு: பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கடிதம்


கேரளாவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு: பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கடிதம்
x
தினத்தந்தி 13 Aug 2019 11:15 PM IST (Updated: 13 Aug 2019 11:15 PM IST)
t-max-icont-min-icon

கேரளாவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு குறித்து பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

புதுடெல்லி,

கேரளாவில் பருவமழை தொடங்கி தொடர்ந்து பெய்து வருகிறது. கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக அங்கு பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு மாவட்டங்கள் நீரில் மூழ்கியுள்ளன. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி போயுள்ளது. சாலைகளில் வெள்ளம் சூழ்ந்து வாகன போக்குவரத்து கடுமையாக பாதிப்படைந்து உள்ளது.

வயநாடு தொகுதியில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளையும், நிவாரண முகாம்களில் இருந்த பாதிக்கப்பட்ட மக்களையும் நேற்று முன்தினம் ராகுல்காந்தி  பார்வையிட்டார். மேலும்  மாநில அரசு அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்திய அவர் அதிகாரிகளிடம், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவும், மறுகட்டமைப்புக்கு உதவும்படியும், உடனடி தேவையான மருந்து, சீரமைப்புக்கான கருவிகள் போன்றவற்றை வழங்கவும் கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில் ராகுல் காந்தி, பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், “கேரள மாநிலத்தில் நிலச்சரிவு ஏற்படக்கூடிய இடங்களை அரசு முன்கூட்டியே கண்டறிந்திருந்தால் பல உயிர்களை காப்பாற்றி இருக்கலாம். மேற்கு தொடர்ச்சி மலைகளில் சுரங்கங்கள் மற்றும் குவாரிகள் அதிகமாக இருப்பதால், காடுகளின் பரப்பளவு குறைந்துள்ளது. மக்கள், வாழ்வாதாரம், சுற்றுச்சூழலை பாதுகாக்க நீண்ட கால செயல் திட்டம் ஒன்றை மத்திய அரசு முன்னெடுக்க வேண்டும்” என்று அதில் குறிப்பிட்டுள்ளார். 

Next Story