மத்திய அரசுக்கு எதிராக 13 எதிர்க்கட்சிகள் டெல்லியில் ஆலோசனை - நாடுதழுவிய போராட்டம் நடத்த திட்டம்


மத்திய அரசுக்கு எதிராக 13 எதிர்க்கட்சிகள் டெல்லியில் ஆலோசனை - நாடுதழுவிய போராட்டம் நடத்த திட்டம்
x
தினத்தந்தி 5 Nov 2019 3:30 AM IST (Updated: 5 Nov 2019 2:49 AM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசுக்கு எதிராக 13 எதிர்க்கட்சிகள் டெல்லியில் ஆலோசனை நடத்தின. அதில், நாடுதழுவிய போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

புதுடெல்லி,

டெல்லியில் நேற்று எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெற்றது. நாடாளுமன்ற மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் குலாம்நபி ஆசாத் இந்த கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தார். இதில், 13 கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

குலாம்நபி ஆசாத், அகமது படேல், ரந்தீப் சிங் சுர்ஜேவாலா (மூவரும் காங்கிரஸ்), டி.கே.ரங்கராஜன் (மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்டு), டி.ராஜா, பினாய் விஸ்வம் (இருவரும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி), டி.ஆர்.பாலு (தி.மு.க.), மனோஜ் ஜா (ராஷ்டிரீய ஜனதாதளம்), முகமது நடிமுல் ஹேக் (திரிணாமுல் காங்கிரஸ்), அஜித்சிங் (ராஷ்டிரீய லோக்தளம்), குபேந்திர ரெட்டி (மதச்சார்பற்ற ஜனதாதளம்), சரத் யாதவ் (லோக் ஜனதாதளம்), உபேந்திர குஷ்வாகா (ஆர்.எல்.எஸ்.பி.), பி.கே.குஞ்சாலி குட்டி (இந்திய யூனியன் முஸ்லிம்லீக்), ஜோஸ் கே.மாணி (கேரள காங்கிரஸ் மாணி பிரிவு), சத்ருஜித் சிங் (ராஷ்டிரீய சோஷலிஸ்ட் கட்சி) ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஆனால், தேசியவாத காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி, சமாஜ்வாடி, ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் சார்பில் யாரும் பங்கேற்கவில்லை.

இந்த கூட்டத்தில், பொருளாதார மந்தநிலை, வேலையில்லா திண்டாட்டம், விவசாயிகள் பிரச்சினை ஆகியவை தொடர்பாக மத்திய அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்திலும், வெளியிலும் ஓரணியில் திரண்டு போராடுவது பற்றி ஆலோசிக்கப்பட்டது. எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை வலுப்படுத்துவது பற்றி விவாதிக்கப்பட்டது.

இந்த பிரச்சினைகள் தொடர்பாக நாடுதழுவிய போராட்டம் நடத்த கூட்டத்தில் உடன்பாடு ஏற்பட்டது.

பின்னர், குலாம்நபி ஆசாத், டி.ஆர்.பாலு, சரத் யாதவ் ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அவர்கள் கூறியதாவது:-

தேசியவாத காங்கிரஸ், இந்த கூட்டணியின் அங்கமாக இருக்கிறது. அதன் தலைவர் சரத் பவார், சோனியா காந்தியை சந்திக்க சென்றுள்ளார். சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சிகள் ஏன் பங்கேற்கவில்லை என்று அந்த கட்சிகளைத்தான் கேட்க வேண்டும்.

வாட்ஸ்-அப் உளவு விவகாரம் தொடர்பாக ஜனாதிபதியை சந்திக்க நேரம் கேட்டுள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story