கர்நாடக மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு தக்க பாடம் புகட்டி உள்ளனர் - ஜார்கண்ட் பிரசாரத்தில் பிரதமர் மோடி பேச்சு


கர்நாடக மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு தக்க பாடம் புகட்டி உள்ளனர் - ஜார்கண்ட் பிரசாரத்தில் பிரதமர் மோடி பேச்சு
x
தினத்தந்தி 9 Dec 2019 11:30 PM GMT (Updated: 2019-12-10T03:56:20+05:30)

கர்நாடக மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு தக்க பாடம் புகட்டி உள்ளனர் என்று ஜார்கண்ட் தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

பொகாரோ,

கர்நாடக மாநில 15 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பா.ஜனதா 12 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது. இதற்கு பிரதமர் நரேந்திர மோடி ஜார்கண்ட் தேர்தல் பிரசாரத்தின்போது பாராட்டு தெரிவித்தார்.

ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தலையொட்டி பிரதமர் நரேந்திர மோடி நேற்று பொகாரோ, பார்ஹி ஆகிய இடங்களில் பிரசாரத்தில் ஈடுபட்டார். அங்கு நடைபெற்ற கூட்டங்களில் அவர் பேசியதாவது:-

கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை காங்கிரசும் அதன் கூட்டணி கட்சிகளும் திசைதிருப்பிவிட்டன. முதுகில் குத்திவிட்டு, கொல்லைப்புறம் வழியாக வந்து மக்களின் தீர்ப்பை காங்கிரஸ் திருடிவிட்டது. அந்த செயலுக்காக கர்நாடக மக்கள் இப்போது காங்கிரசுக்கு தண்டனை கொடுத்துள்ளதுடன், தக்க பாடமும் புகட்டி உள்ளனர்.

கர்நாடகத்தில் நடைபெற்ற 15 தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் அசாதாரணமானது, மிகவும் சிறப்பானது. தீர்ப்புக்கு துரோகம் இழைத்ததால் கோபமாக இருந்த மக்கள் இன்று வெடித்துள்ளனர். இது மக்கள் அளித்த தீர்ப்புக்கு கிடைத்த வெற்றி, ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி.

இந்த இடைத்தேர்தல் முடிவு ஜார்கண்ட் உள்பட மற்ற மாநிலங்களுக்கு 3 தகவல்களை தெரிவித்துள்ளது.

முதலாவது மக்கள் நிலையான அரசையே விரும்புகிறார்கள். இரண்டாவது, தேர்தலில் அளித்த தீர்ப்பை திசைதிருப்பியதற்காக தாங்கள் அவமதிக்கப்பட்டதாக மக்கள் உணர்ந்தார்கள். அதனாலேயே இதற்கு காரணமானவர்களுக்கு தக்க பாடம் புகட்டியுள்ளனர். மூன்றாவதாக, பா.ஜனதா கட்சியால் மட்டுமே சிறப்பான ஆட்சியை வழங்க முடியும் என மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்.

கர்நாடகத்தில் முற்றிலும் மாறுபட்ட 2 கட்சிகள் சுயநலத்துக்காக ஒன்றாக சேர்ந்து அரசை அமைத்தன. ஒரு வருடம் முழுவதையும் அவர்கள் சண்டை, சச்சரவுகளுடனேயே கழித்துவிட்டார்கள். முதல்-மந்திரியை காங்கிரஸ் துப்பாக்கி முனையில் வைத்திருந்தது. இதனால் ஒன்றும் செய்யமுடியாத முதல்-மந்திரி மக்களிடம் சென்று கதறி அழுதார். கடத்தப்பட்ட ஒருவரைவிட மோசமான நிலையில் முதல்-மந்திரியை காங்கிரஸ் வைத்திருந்தது.

ஜார்கண்ட் மாநிலத்தில் நீங்கள் காங்கிரஸ், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, ராஷ்டிரீய ஜனதாதளம் கூட்டணிக்கு வாக்களித்தால் இந்த மாநிலத்திலும் நிலையில்லாத மற்றும் உறுதியில்லாத நிலைமைதான் ஏற்படும். எனவே எதிர்க்கட்சியின் அனைத்து வேட்பாளர்களும் தோற்கடிக்கப்பட வேண்டும்.

இங்கு முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசு மாநிலத்தின் வளங்களை திருடியது. ஆனால் மத்தியிலும், மாநிலத்திலும் இருந்த பா.ஜனதா அரசு மக்கள் நலனுக்காக பல திட்டங்களை நிறைவேற்றியது. மாநிலத்தில் வளர்ச்சிக்கு தடையாக இருந்த நக்சலைட்களை பா.ஜனதா அரசு ஒழித்தது.

உங்கள் நலனை பாதுகாக்கும் அரசை தேர்ந்தெடுங்கள். ஏற்கனவே நடைபெற்றுள்ள 2 கட்ட தேர்தல்களில் பா.ஜனதாவின் வெற்றிக்கு அடிக்கல் நாட்டப்பட்டுவிட்டது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Next Story