குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு: டெல்லியில் மீண்டும் வன்முறை வெடித்தது - போலீசார் துப்பாக்கி சூடு


குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு: டெல்லியில் மீண்டும் வன்முறை வெடித்தது - போலீசார் துப்பாக்கி சூடு
x
தினத்தந்தி 17 Dec 2019 11:00 PM GMT (Updated: 17 Dec 2019 10:18 PM GMT)

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக டெல்லியில் நேற்று மீண்டும் வன்முறை வெடித்தது. வன்முறையை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கியால் சுட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுடெல்லி,

தேசிய குடியுரிமை திருத்த சட்டம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டம் அரசியலமைப்புக்கு விரோதமானது என்றும், இந்தியாவின் மதசார்பற்ற தன்மையை மீறுவதாகவும் எதிர்க்கட்சிகளும், முஸ்லிம் அமைப்புகளும் குற்றம் சாட்டி உள்ளன.

இந்த சட்டத்தை கண்டித்து அசாம், மேற்கு வங்காளத்தில் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. அசாம் மாநிலத்தில் போராட்டத்தின்போது வன்முறை சம்பவங்களும் அரங்கேறின. இந்த போராட்டம் கடந்த 15-ந் தேதி தலைநகர் டெல்லிக்கும் பரவியது. டெல்லி ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை மூண்டது.

பஸ்கள், போலீஸ் வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. வன்முறையில் ஈடுபட்டவர்களை போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கலைத்தனர். போலீசாரின் தடியடிக்கு மாணவர்கள், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

கடந்த 15-ந் தேதி நடந்த போராட்டம் போலீசாரால் கட்டுப்படுத்தப்பட்ட போதிலும், டெல்லியில் குறிப்பிட்ட சில பகுதிகளில் இந்த பிரச்சினை இன்னும் நீரு பூத்த நெருப்பாகவே உள்ளது.

இந்த நிலையில் நேற்று நண்பகல் 12 மணி அளவில் டெல்லியின் கிழக்கு பகுதியில் உள்ள சீலாம்பூர் என்ற இடத்தில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சில அமைப்பினர் ஒன்று திரண்டு ஜாப்ராபாத் நோக்கி பேரணியாக புறப்பட்டு சென்றனர். இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதைத் தொடர்ந்து அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

இதையடுத்து சீலாம்பூர் பகுதியில் ஒரு இடத்தில் போராட்டக்காரர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே திடீரென மோதல் ஏற்பட்டது.

போராட்டக்காரர்கள் போலீசாரை நோக்கி கற்களை வீசினார்கள். இதனால் போலீசார் அவர்கள் மீது தடியடி நடத்தினார்கள். இதனை தொடர்ந்து ஆத்திரம் அடைந்த போராட்டக்காரர்கள் பஸ்களையும், வாகனங்களையும் கல்வீசி தாக்கினார்கள். சில மோட்டார் சைக்கிள்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டது.

இதனால் அந்த பகுதியே போர்க்களம்போல் காட்சி அளித்தது. வன்முறையை கட்டுப்படுத்த போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். ஒரு கட்டத்தில் போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதன்பிறகு வன்முறை ஓரளவுக்கு கட்டுக்குள் வந்தது.

பின்னர் போலீஸ் அதிகாரிகள், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அமைதியான சூழ்நிலையை உருவாக்கினார்கள்.

மசூதிகளின் ஒலிபெருக்கிகளிலும் பேசி சுமுக நிலையை ஏற்படுத்தினர். இந்த வன்முறையின்போது 12 போலீஸ்காரர்கள் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்ட 9 பேர் என மொத்தம் 21 பேர் காயம் அடைந்தனர். வன்முறை காரணமாக சீலாம்பூர் பகுதிகளில் உள்ள மெட்ரோ ரெயில் நிலையங்கள் மாலை வரை மூடப்பட்டதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

இதற்கிடையே நேற்று மாலை, ஜாமியா மில்லியா பல்கலைக்கழகத்தின் வெளியே மாணவர்கள் மீண்டும் போராட்டத்தை தொடங்கியதாக தகவல் பரவியது. இதன் காரணமாக டெல்லியில் பதற்றம் தொடர்ந்து நீடித்து வருகிறது.

Next Story