இந்தியாவில் கொரோனா பாதிப்பின் புதிய உச்சம்: ஒரே நாளில் 49,310 பேருக்கு தொற்று உறுதி


இந்தியாவில் கொரோனா பாதிப்பின் புதிய உச்சம்: ஒரே நாளில் 49,310 பேருக்கு தொற்று உறுதி
x
தினத்தந்தி 24 July 2020 11:30 PM GMT (Updated: 24 July 2020 10:24 PM GMT)

இந்தியாவில் கொரோனா பாதிப்பு புதிய உச்சம் தொட்டுள்ளது. ஒரே நாளில் 49,310 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி, 

இந்தியாவில் கொரோனா பாதிப்பு புதிய உச்சம் தொட்டுள்ளது. ஒரே நாளில் 49,310 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், நாட்டில் இந்த வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்தை கடந்து இருக்கிறது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. அந்த வகையில் நாட்டில் டாமன் டையூ மற்றும் லட்சத்தீவை தவிர, மற்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் அனைத்திலும் பலர் கொரோனாவால் புதிதாக பாதிப்புக்கு உள்ளாக்கி இருக்கின்றனர்.

மராட்டிய மாநிலத்தில் மட்டும் புதிதாக 9,895 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருகிறது. இதேபோல ஆந்திராவில் சுமார் 8 ஆயிரம் பேரும், தமிழகத்தில் 6,472 பேரும், கர்நாடகாவில் 5,030 பேரும், உத்தரபிரதேசத்தில் 2,516 பேரும், மேற்குவங்காளத்தில் 2,436 பேரும், அசாமில் 2,019 பேரும், பீகாரில் 1,611 பேரும், தெலுங்கானாவில் 1,567 பேரும், ஒடிசாவில் 1,264 பேரும், குஜராத் மற்றும் கேரளாவில் தலா 1,078 பேரும், டெல்லியில் 1,041 பேரும், ராஜஸ்தானில் 866 பேரும், அரியானாவில் 789 பேரும், ஜம்மு காஷ்மீரில் 718 பேரும், மத்தியபிரதேசத்தில் 632 பேரும், ஜார்கண்டில் 490 பேரும், பஞ்சாபில் 438 பேரும், சத்தீஸ்காரில் 286 பேரும், திரிபுராவில் 207 பேரும், கோவாவில் 174 பேரும், உத்தரகாண்டில் 145 பேரும், புதுச்சேரியில் 120 பேரும், இமாசலபிரதேசத்தில் 109 பேரும், நாகாலாந்தில் 90 பேரும், மணிப்பூரில் 55 பேரும், அருணாசலபிரதேசத்தில் 42 பேரும், தாதர்நகர் ஹவேலியில் 37 பேரும், சிக்கிமில் 22 பேரும், மேகாலயாவில் 20 பேரும், அந்தமான் நிகோபார் தீவில் 19 பேரும், மிசோரத்தில் 15 பேரும், சண்டிகாரில் 7 பேரும், லடாக்கில் 4 பேரும் என ஒரே நாளில் 49 ஆயிரத்து 310 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 12 லட்சத்து 87 ஆயிரத்து 945 ஆக அதிகரித்துள்ளது. இதில் 63.45 சதவீதம் பேர், அதாவது 8 லட்சத்து 17 ஆயிரத்து 209 பேர் சிகிச்சையின் மூலம் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர். இன்னும் 4 லட்சத்து 40 ஆயிரத்து 135 பேர் ஆஸ்பத்திரிகள் மற்றும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியாவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் முதல் 2 இடங்களில் மராட்டியம் மற்றும் தமிழகம் இருக்கின்றன. இதில் மராட்டிய மாநிலத்தில் கொரோனா பாதிப்பு 3½ லட்சத்தையும், தமிழகத்தில் 2 லட்சத்தையும் நெருங்கி உள்ளது. 3-வது இடத்தில் தொடரும் டெல்லியில் 1 லட்சத்து 27 ஆயிரத்து 364 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது.

இந்த பட்டியலில் தமிழகத்தின் அண்டை மாநிலங்களான கர்நாடகா 4-வது இடத்திலும், ஆந்திரா 5-வது இடத்திலும், கேரளா 17-வது இடத்திலும் உள்ளன. இதில் கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு 80 ஆயிரத்தையும், ஆந்திராவில் 70 ஆயிரத்தையும், கேரளாவில் 16 ஆயிரத்தையும் கடந்துள்ளது. புதுச்சேரியில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,420 ஆக உள்ளது.

மேலும் ஆட்கொல்லி வைரசான கொரோனா புதிதாக 740 பேரின் உயிரையும் பறித்துள்ளது. இதில் அதிகபட்சமாக மராட்டிய மாநிலத்தில் மட்டும் புதிதாக 298 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதற்கு அடுத்தபடியாக கர்நாடகாவில் 97, தமிழகத்தில் 88, ஆந்திராவில் 61, மேற்குவங்காளத்தில் 34, குஜராத்தில் 28, உத்தரபிரதேசம் மற்றும் டெல்லியில் தலா 26, ராஜஸ்தானில் 11, மத்தியபிரதேசத்தில் 10, ஜம்மு காஷ்மீர் மற்றும் தெலுங்கானாவில் தலா 9, பஞ்சாபில் 8, அசாம், ஒடிசா மற்றும் அரியானாவில் தலா 6, கேரளாவில் 5, உத்தரகாண்ட், ஜார்கண்ட் மற்றும் புதுச்சேரில் தலா 3, சத்தீஸ்கார், திரிபுரா மற்றும் கோவாவில் தலா ஒருவரையும் கொரோனா ஒரே நாளில் பலிவாங்கி இருக்கிறது. இதனால் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்து 601 ஆக உயர்ந்துள்ளது.

ஒட்டு மொத்தமாக எடுத்துக் கொண்டால், மராட்டிய மாநிலத்தில் மட்டும் 12,854 பேரின் உயிரை கொரோனா காவு வாங்கி இருக்கிறது. டெல்லியில் 3,745 பேரும், தமிழகத்தில் 3,320 பேரும், குஜராத்தில் 2,252 பேரும், கர்நாடகாவில் 1,616 பேரும், உத்தரபிரதேசத்தில் 1,289 பேரும் மேற்குவங்காளத்தில் 1,255 பேரும் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி தங்கள் உயிரை இழந்துள்ளனர். மற்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பலி எண்ணிக்கை ஆயிரத்துக்கும் குறைவாக உள்ளது.

மேற்கண்ட தகவல்கள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று காலை வெளியிட்ட புள்ளிவிவர பட்டியலில் இடம்பெற்று இருக்கிறது.


Next Story