காஷ்மீரில் நடந்த சண்டையில் பாதுகாப்பு படையினர் 3 பேர் வீரமரணம்; 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை


காஷ்மீரில் நடந்த சண்டையில் பாதுகாப்பு படையினர் 3 பேர் வீரமரணம்; 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
x
தினத்தந்தி 18 Aug 2020 3:30 AM IST (Updated: 17 Aug 2020 10:59 PM IST)
t-max-icont-min-icon

காஷ்மீரில் நடந்தசண்டையில் பாதுகாப்பு படையினர் 3 பேர் வீரமரணம் அடைந்தனர். இந்த தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள கிரீரி பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக நேற்று பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, மத்திய ரிசர்வ் படை மற்றும் ஜம்மு காஷ்மீர் போலீசார் இணைந்து கூட்டு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். பயங்கரவாதிகளின் இந்த கண்மூடித்தனமான தாக்குதலில் மத்திய ரிசர்வ் படை வீரர்கள் 2 பேர், ஜம்மு காஷ்மீர் போலீஸ் சிறப்பு அதிகாரி என 3 பேர் படுகாயம் அடைந்தனர்.உடனடியாக அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி 3 பேரும் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதற்கிடையே, பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய பகுதி பாதுகாப்பு வளையத்திற்கு கொண்டு வரப்பட்டு பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். மதியம் அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச் சண்டை நடந்தது. பாதுகாப்பு படையினர் நடத்திய துல்லியமான தாக்குதலில் பயங்கரவாதிகள் 3 பேரும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

அவர்களிடம் இருந்து பயங்கர ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவர்கள் லஷ்கர்- இ-தொய்பா பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என காஷ்மீர் இன்ஸ்பெக்டர் ஜெனரல் விஜயகுமார் தெரிவித்தார். கடந்த 3 நாட்களில் பாதுகாப்பு படையினர் மீது பயங்கரவாதிகள் நடத்திய 2-வது தாக்குதல் இதுவாகும்.

கடந்த 14-ந் தேதி நவ்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படையினர் 2 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story