அடுத்த 3 மாதங்களில் மராட்டியத்தில் ஆட்சி அமைப்போம்: பாஜக நம்பிக்கை


அடுத்த 3 மாதங்களில் மராட்டியத்தில்  ஆட்சி அமைப்போம்: பாஜக நம்பிக்கை
x
தினத்தந்தி 23 Nov 2020 9:50 PM GMT (Updated: 23 Nov 2020 9:50 PM GMT)

மராட்டியத்தில் அடுத்த 3 மாதங்களில் பாரதீய ஜனதா மீண்டும் ஆட்சி அமைக்கும் என மத்திய மந்திரி ராவ்சாகேப் தன்வே தெரிவித்தார்.

அவுரங்காபாத், 

மராட்டிய மேல்-சபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்தநிலையில் அவுரங்காபாத் மாவட்டம் பர்பானியில் உள்ள பட்டதாரி தொகுதியில் பாரதீய ஜனதா சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவாக கட்சியின் மூத்த தலைவரும், மத்திய மந்திரியுமான ராவ் சாகேப் தன்வே நேற்று பிரசாரம் செய்தார். அப்போது அவர் அடுத்த 2 அல்லது 3 மாதங்களில் மராட்டியத்தில் பாரதீய ஜனதா மீட்டும் ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

பாரதீய ஜனதா கட்சி தொண்டர்கள் மராட்டியத்தில் நமது ஆட்சி மீண்டும் வராது என நினைக்கவேண்டாம். நாம் அடுத்த 2 அல்லது 3 மாதங்களில் மீண்டும் ஆட்சி அமைப்போம். இதற்கான கணக்கிடல் பணியில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம். நாங்கள் தற்போது நடக்கவிருக்கும் மேல்-சபை தேர்தல் முடிவதற்காக தான் காத்திருக்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

மராட்டியத்தில் தற்போது பா.ஜனதா அதிக பட்சமாக 105 இடங்களை தன் கைவசம் வைத்துள்ளது. அடுத்தபடியாக சிவசேனா 56 இடங்களையும், தேசியவாத காங்கிரஸ் 54 இடங்களையும், காங்கிரஸ் 44 இடங்களையும் தன்வசம் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story