காஷ்மீரில் பாகிஸ்தான் அத்துமீறி நடத்திய தாக்குதலில் பி.எஸ்.எப். அதிகாரி வீரமரணம்


காஷ்மீரில் பாகிஸ்தான் அத்துமீறி நடத்திய தாக்குதலில் பி.எஸ்.எப். அதிகாரி வீரமரணம்
x
தினத்தந்தி 1 Dec 2020 9:44 PM GMT (Updated: 1 Dec 2020 9:44 PM GMT)

காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் பி.எஸ்.எப். அதிகாரி ஒருவர் வீரமரணம் அடைந்தார்.

ஜம்மு, 

சண்டைநிறுத்த உடன்பாட்டை தாண்டி காஷ்மீரில் பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இத்தாக்குதல்களில் கடந்த மாதம் மட்டும் பாதுகாப்புப் படையினர் 9 பேர், பொதுமக்கள் 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், எல்லை பாதுகாப்பு படை அது உருவாக்கப்பட்ட தினத்தை நேற்று கொண்டாடியவேளையில், அப்படையைச் சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் பாவோடின்சாட் கைட், பாகிஸ்தான் ராணுவ தாக்குதலில் வீரமரணம் அடைந்தார்.

காஷ்மீரின் ரஜோரி பகுதியில் முன்னணி பாதுகாவல் நிலையில் பணியில் இருந்த பாவோடின்சாட், பாகிஸ்தானின் தாக்குதலை தீரத்துடன் எதிர்கொண்டார். எதிரிகளுக்கு வீரமாக பதிலடி கொடுத்த அவர், தனது சகவீரர்கள் பலரது உயிரையும் காத்தார் என பி.எஸ்.எப். செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

பாவோடின்சாட் உடலை அவரது சொந்த ஊரான, மணிப்பூர் மாநிலம் மபோகுக்கி கிராமத்துக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

காஷ்மீரின் கதுவா மாவட்டத்தின் ஹிராநகர் பகுதியிலும், கரோல் கிருஷ்ணா, குர்னாம் மற்றும் பான்சார் எல்லை பாதுகாவல் நிலைகள் மீது பாகிஸ்தான் நேற்று முன்தினம் இரவு தொடங்கி நேற்று அதிகாலை வரை அத்துமீறி தாக்குதல் நடத்தியது. அதில் இந்தியா தரப்பில் யாரும் காயம் அடையவில்லை. பாகிஸ்தான் தாக்குதலுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்தன.

Next Story