இந்திய-சீன ராணுவ அதிகாரிகளுக்கு இடையே 9-வது சுற்று பேச்சுவார்த்தை; லடாக்கில் படைகளை திரும்பப்பெறுவது குறித்து ஆலோசனை


இந்திய-சீன ராணுவ அதிகாரிகளுக்கு இடையே 9-வது சுற்று பேச்சுவார்த்தை; லடாக்கில் படைகளை திரும்பப்பெறுவது குறித்து ஆலோசனை
x
தினத்தந்தி 24 Jan 2021 8:11 PM GMT (Updated: 24 Jan 2021 8:11 PM GMT)

ராணுவம் மற்றும் தூதரக ரீதியாக தொடர் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. அந்தவகையில் நேற்று 9-வது சுற்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

புதுடெல்லி, 

கிழக்கு லடாக்கில் கடந்த ஆண்டு மே மாதம் நடந்த சீன ராணுவத்தின் அத்துமீறலும், ஜூன் மாதம் நிகழ்ந்த மோதலில் ஏற்பட்ட உயிரிழப்புகளும் உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின. இந்த பிரச்சினை எல்லையில் நீறுபூத்த நெருப்பாகவே புகைந்து கொண்டிருக்கிறது. லடாக்கில் சீனாவின் அச்சுறுத்தலை சமாளிப்பதற்காக சர்ச்சைக்குரிய பகுதிகள் முழுவதிலும் சுமார் 50 ஆயிரம் வீரர்களை களமிறக்கி இந்தியா கண்காணித்து வருகிறது. இதே எண்ணிக்கையிலான வீரர்களை சீனாவும் தனது பங்குக்கு நிறுத்தி இருக்கிறது. இதனால் லடாக்கில் ஏற்பட்ட பதற்றம் தணிய மறுக்கிறது.

 இந்த பதற்ற சூழலை முடிவுக்கு கொண்டு வந்து, அங்கு அமைதியை நிலைநாட்டுவதற்கு இரு தரப்பும் ஆர்வம் காட்டி வருகின்றன. இதற்காக ராணுவம் மற்றும் தூதரக ரீதியாக தொடர் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. அந்தவகையில் நேற்று 9-வது சுற்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. 

கிழக்கு லடாக் எல்லையில் சீன பகுதிக்குள் அமைந்துள்ள மோல்டோ எல்லை பகுதியில் இந்த சந்திப்பு நடந்தது. இந்திய தரப்பில் லே பிராந்திய 14-வது படைப்பிரிவு கமாண்டர் லெப்டினன்ட் ஜெனரல் பி.ஜி.கே.மேனன் தலைமையிலான குழுவினர் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். இந்த பேச்சுவார்த்தையிலும் சர்ச்சைக்குரிய பகுதிகளில் இருந்து படைகளை வாபஸ் பெறுவது குறித்தே விவாதிக்கப்பட்டது. குறிப்பாக கிழக்கு லடாக்கில் சர்ச்சைக்குரிய மலைப்பிராந்திய பகுதிகளில் இருந்து படைகளை விலக்கி, பதற்றத்தை தணிக்க வேண்டும் என சீனாவிடம் இந்தியா சார்பில் வலியுறுத்தப்பட்டது.


Next Story