விவசாயம், சுகாதாரத்துக்கு முன்னுரிமை; தமிழக சாலை பணிகளுக்கு ரூ.1 லட்சம் கோடி; வருமான வரி விகிதத்தில் மாற்றம் இல்லை; தடுப்பூசிக்கு ரூ.35 ஆயிரம் கோடி - மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு


விவசாயம், சுகாதாரத்துக்கு முன்னுரிமை; தமிழக சாலை பணிகளுக்கு ரூ.1 லட்சம் கோடி; வருமான வரி விகிதத்தில் மாற்றம் இல்லை; தடுப்பூசிக்கு ரூ.35 ஆயிரம் கோடி - மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு
x
தினத்தந்தி 1 Feb 2021 8:30 PM GMT (Updated: 2 Feb 2021 7:26 AM GMT)

மத்திய பட்ஜெட்டில் விவசாயம், சுகாதாரத்துறைக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு உள்ளது. கொரோனா தடுப்பூசிக்கு ரூ.35 ஆயிரம் கோடி பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டு இருக்கிறது.

நாடு கொரோனாவுக்கு எதிராக போராடுகிற நிலையில் தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் என்பதால் மத்திய பட்ஜெட் பெருத்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருந்தது.

மத்திய பட்ஜெட் தாக்கல்
இந்த நிலையில் மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், நாடாளுமன்ற மக்களவையில் நேற்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் உள்கட்டமைப்பு, சுகாதாரம், விவசாயம் ஆகிய 3 துறை களுக்கு கூடுதல் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

மத்திய பட்ஜெட்டை அவர் வழக்கமான காகித வடிவில் இல்லாமல், ‘டேப்லட்’ என்று அழைக்கப்படுகிற கையடக்க கணினி வாயிலாக தாக்கல் செய்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

இதுவரை நாடு கண்டிராத சூழல்களில் இந்த பட்ஜெட் தயாராகி உள்ளது. ஒரு நாட்டில், நாட்டுக்குள் ஒரு பிராந்தியத்தில் பேரழிவுகள் ஏற்பட்டிருப்பதை நாம் அறிந்திருக்கிறோம். ஆனால் கொரோனா வைரசால் 2020-ம் ஆண்டு, நாம் கண்டது, இதுவரை காணாத தனித்துவமானது.

2020-21 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை நான் தாக்கல் செய்தபோது, ஏற்கனவே மந்த நிலையில் இருந்த உலக பொருளாதாரம், இதுவரை காணாத அளவுக்கு வீழ்ச்சி அடையும் என்று நாம் கற்பனை செய்துகூட பார்த்து இருக்க முடியாது.

48 மணி நேரத்தில் நிவாரணம்
கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவலை தடுக்க 3 வார கால முழு ஊரடங்கை அறிவித்து 48 மணி நேரத்துக்குள், ரூ.2.76 லட்சம் கோடி மதிப்பிலான ‘பிரதம மந்திரி காரிப் கல்யாண் யோஜனா’ நிவாரண திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.

இதன் மூலம் 80 கோடி பேருக்கு இலவச உணவு தானியம் வழங்கப்பட்டது. பல மாதங்களுக்கு 8 கோடி குடும்பங்களுக்கு இலவச கியாஸ் சிலிண்டர்கள் வினியோகிக்கப்பட்டன. 40 கோடிக்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு, பெண்களுக்கு, முதியோருக்கு, ஏழைகளுக்கு நேரடி நிதி உதவி வழங்கப்பட்டது.

இவ்வாறு கூறிய நிதி மந்திரி, அண்மையில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் நாம் பெற்ற அபார வெற்றியை சுட்டிக்காட்டவும் தவறவில்லை.

தடுப்பூசிக்குரூ.35 ஆயிரம் கோடி
நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அவற்றில் முக்கியமானவை இவை:-

* அடுத்த நிதியாண்டில் (2021-22) சுகாதாரம், நல்வாழ்வுக்கு ரூ.2 லட்சத்து 23 ஆயிரத்து 846 கோடி ஒதுக்கப்படுகிறது. நடப்பு நிதி ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 137 சதவீதம் அதிகம் ஆகும். நோய் தடுப்பு, 

நோய் நிவாரணம், நல்வாழ்வு ஆகிய 3 பகுதிகளும் வலுப்படுத்தப்படும்.

* இந்தியாவில் கொரோனா வைரஸ் தடுப்புக்காக 2 தடுப்பூசிகள் தற்போது உள்ளன. இந்த தடுப்பூசிகள், இந்திய மக்களை மருத்துவ ரீதியில் பாதுகாப்பதுடன், 100 அல்லது அதற்கு மேற்பட்ட நாடுகளை சேர்ந்த மக்களையும் பாதுகாக்கின்றன. விரைவில் இன்னும் 2 அல்லது அதற்கு கூடுதலான தடுப்பூசிகள் வர உள்ளன. தடுப்பூசிக்காக அடுத்த நிதி ஆண்டில் ரூ.35 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்படுகிறது.

சுயசார்பு ஆரோக்கிய இந்தியா
* தேசிய சுகாதார திட்டத்துடன், சுயசார்பு ஆரோக்கிய இந்தியா திட்டம் 6 ஆண்டுகளில் ரூ.64 ஆயிரத்து 180 கோடியில் நிறைவேற்றப்படும்.

* 2.86 கோடி குடும்பங்களுக்கு குழாய் வழி குடிநீர் வழங்குவதற்கு அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.2.87 லட்சம் கோடி செலவிடப்படும்.

* நகர்ப்புற தூய்மை இந்தியா திட்டத்துக்கு அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்து 41 ஆயிரத்து 678 கோடி செலவிடப்படும்.

* 13 துறைகளில் உற்பத்தி அடிப்படையிலான ஊக்கத்தொகை வழங்குவதற்காக அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.1.97 லட்சம் கோடி செலவிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஜவுளி பூங்காக்கள்
* வேலைவாய்ப்பு, ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில் 3 ஆண்டுகளில் 7 ஜவுளி பூங்காக்கள் அமைக்கப்படும்.

* மூலதன செலவு நடப்பு நிதி ஆண்டின் ரூ.4.12 லட்சம் கோடியில் இருந்து ரூ.5.54 லட்சம் கோடியாக உயர்த்தப்படுகிறது. இது 34.5 சதவீதம் கூடுதலாகும்.

* இதுவரை இல்லாத வகையில் சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைகளுக்கு ரூ.1.18 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் ரூ.1 லட்சத்து 8 ஆயிரத்து 230 கோடி மூலதன வகைக்கானது. அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் 8,500 கி.மீ. சாலைகள் அமைக்கப்படும்.

தமிழக திட்டங்கள்
* தமிழகத்தில் நெடுஞ்சாலைகள் அமைப்பதற்குரூ.1 லட்சத்து 3 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்படுகிறது.

* சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் இரண்டாவது கட்டத்தை 118.9 கி.மீ. தொலைவில் நிறைவேற்ற ரூ.63 ஆயிரத்து 246 கோடி ஒதுக்கப்படுகிறது.

* சென்னை உள்ளிட்ட5 மீன்பிடி துறைமுகங்கள், பொருளாதார செயல்பாட்டு மையங்களாக மேம்படுத்தப்படும்.

* தமிழகத்தில் பன்னோக்கு கடற்பாசி பூங்கா உருவாக்கி, கடற்பாசி சாகுபடி மேம்படுத்தப்படும்.

1 கோடி குடும்பங்களுக்கு கியாஸ் இணைப்பு
* நகர்ப்புறங்களில் பஸ் போக்குவரத்தை மேம்படுத்துவதற்கு ரூ.18 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

* ரூ.2 ஆயிரம் கோடியில் முன்னணி துறைமுகங்களில் பொது, தனியார் பங்களிப்புடன் 7 திட்டங்கள் நிறைவேற்றப்படும்.

* மேலும் 1 கோடி குடும்பங்களுக்கு இலவச கியாஸ் சிலிண்டர் இணைப்பு திட்டம் நீட்டிக்கப்படும்.

* இந்திய சூரிய மின்சக்தி நிறுவனத்துக்கு ரூ.1,000 கோடியும், இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு நிறுவனத்துக்கு ரூ.1,500 கோடியும் மூலதன வகைக்கு வழங்கப்படும்.

காப்பீட்டுதுறையில் அன்னிய நேரடி முதலீடு அதிகரிப்பு
* காப்பீட்டு துறையில் அன்னிய நேரடி முதலீடு வரம்பு 49 சதவீதத்தில் இருந்து 74 சதவீதமாக உயர்த்தப்படுகிறது.

* பொதுத்துறை வங்கிகளின் நிதி நிலைமையை பலப்படுத்துவதற்காக ரூ.20 ஆயிரம் கோடி அடுத்த நிதி ஆண்டில் வழங்கப்படும்.

* பாரத் பெட்ரோலியம் நிறுவனம், ஏர் இந்தியா, இந்திய கப்பல் கழகம், இந்திய கண்டெய்னர் கார்ப்பரேசன், ஐ.டி.பி.ஐ. வங்கி, பாரத் எர்த் மூவர்ஸ் நிறுவனம், பவான் கான்ஸ் உள்ளிட்ட நிறுவன பங்குகளை அடுத்த நிதி ஆண்டுக்குள் விற்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ரூ.16.5 லட்சம் கோடி விவசாய கடன்
* 2021-22 நிதி ஆண்டில் ரூ.16.5 லட்சம் கோடி விவசாய கடன்கள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கால்நடை, பால்பண்ணை, மீன்வளம் ஆகியவற்றின் மீது கவனம் செலுத்தப்படும். நுண் பாசன நிதி ரூ.10 ஆயிரம் கோடியாக, இரு மடங்காக அதிகரிக்கப்படுகிறது.

* கிராமப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி ரூ.30 ஆயிரம் கோடியில் இருந்து ரூ.40 ஆயிரம் கோடியாக உயர்த்தப்படுகிறது.

* ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டத்தால் 86 சதவீத பயனாளிகள் பயன்பெறுகின்றனர். எஞ்சிய 4 மாநிலங்களில் அடுத்த சில மாதங்களில் இந்த திட்டம் ஒருங்கிணைக்கப்படும்.

* குறு சிறு நடுத்தர தொழில் நிறுவன துறைகளுக்கு பட்ஜெட் ஒதுக்கீடு இரு மடங்காக ரூ.15 ஆயிரத்து 700 கோடி அளவுக்கு உயர்த்தப்படுகிறது.

* 15 ஆயிரம் பள்ளிக்கூடங்கள், தேசிய கல்வி கொள்கை வசதிகளை நடைமுறைப்படுத்தி மேம்படுத்தப்படும். இவை மாதிரி பள்ளிக்கூடங்களாக திகழும்.

தாழ்த்தப்பட்ட மாணவர்கள் கல்வி உதவித்தொகை
* 100 புதிய ராணுவ பள்ளிக்கூடங்கள் தொண்டு நிறுவனங்கள், தனியார், மாநில பங்களிப்புடன் திறக்கப்படும். பழங்குடி மக்கள் வாழும் பகுதிகளில் 750 ஏகலைவா மாதிரி உறைவிட பள்ளிகள் திறக்கப்படும்.

* 2025-26 வரையில் 6 ஆண்டுகளில் 4 கோடி தாழ்த்தப்பட்ட மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு ரூ.35 ஆயிரத்து 219 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

* இந்திய வரலாற்றில் முதல் முறையாக டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு ரூ.3,768 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

* வருமான வரி பிச்சினைகளில் தீர்வு காண்பதற்கு தேசிய முகமற்ற வருமான வரி தீர்ப்பாயம் அமைக்கப்படும்.

* மலிவு விலை வீடு வாங்குவோருக்கு ரூ.1.5 லட்சம் கூடுதல் வட்டிச்சலுகை வழங்குவது அடுத்த ஆண்டு மார்ச் வரை நீட்டிக்கப்படுகிறது.

* தங்கம், வெள்ளி ஆகியவற்றின் மீதான சுங்க வரி குறைக்கப்படுகிறது.

வருமான வரி மாற்றம் இல்லை
மத்திய பட்ஜெட்டில் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த மாத சம்பளதாரர்கள் வருமான வரி சலுகையை எதிர்பார்த்தார்கள். ஆனால் வருமான வரி சலுகை எதுவும் அறிவிக்கப்படவில்லை. வருமான வரி விகிதங்களிலும் மாற்றம் கிடையாது. அதே நேரத்தில் 75 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கு வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதில் இருந்து விலக்கு வழங்கப்பட்டுள்ளது.

Next Story