18-45 வயதுடைய 59 கோடி பேருக்கு செலுத்த 122 கோடி கொரோனா தடுப்பூசிகள் தேவை; சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தகவல்
நாட்டில் 18-45 வயதுடைய 59 கோடி பேருக்கு செலுத்த 122 கோடி கொரோனா தடுப்பூசிகள் தேவைப்படுகின்றன என சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தானாக வழக்குப்பதிவு
கொரோனா பேரிடர் காலத்தில் அத்தியாவசிய மருந்து பொருட்கள் விநியோகம், சேவைகள் தொடர்பாக தானாக முன்வந்து பதிவு செய்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், எல். நாகேஸ்வர ராவ், ரவீந்திர பட் ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு விசாரித்து, உத்தரவை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளது.
ஆக்சிஜன் விநியோகம், அத்தியாவசிய மருந்து பொருட்கள் விநியோகம், தடுப்பூசி செலுத்தும் முறை, ஊரடங்கு அறிவிப்பு ஆகியன தொடர்பாக ஏன் சுப்ரீம் கோர்ட்டு ஒரே மாதிரியான உத்தரவை பிறப்பிக்கக் கூடாது என்பது தொடர்பாக மத்திய, மாநில, யூனியன் பிரதேச அரசுகள், ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தவர்கள் பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஏப்ரல் 22-ந் தேதி உத்தரவிட்டிருந்தது.
201 பக்க பிரமாண அறிக்கைஇந்த நிலையில், மத்திய சுகாதாரத் துறையின் கூடுதல் செயலர் கோவிந்த் மோகன் அண்மையில் தாக்கல் செய்த 201 பக்க பிரமாண பத்திரத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-
கொரோனா தடுப்பூசி திட்டத்துக்கு மத்திய அரசு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. நாட்டில் தற்போது கையிருப்பில் உள்ள தடுப்பூசிகள், தடுப்பூசிகளின் தயாரிப்பு ஆதாரங்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, குறுகிய காலத்தில் அனைவருக்கும் தடுப்பூசியை செலுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
59 கோடி பேருக்கு...நாட்டில் தற்போது கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய இரண்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இவற்றை அறிவியல் பூர்வமாக முன்னுரிமை அளித்து செலுத்தி வருகிறோம். முதலில் சுகாதாரப் பணியாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது.
நாட்டில் தற்போது 18 முதல் 45 வயதுடையவர்கள் 59 கோடி பேர் உள்ளனர். இந்த 59 கோடி பேருக்கு செலுத்த 122 கோடி கொரோனா தடுப்பூசிகள் தேவைப்படுகின்றன.
கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய இரண்டு தடுப்பூசிகளையும், வெளிநாடுகளில் அங்கீகரிக்கப்பட்டுள்ள ஏனைய தடுப்பூசிகளையும் வாங்குவதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு முடுக்கிவிட்டுள்ளது. அவசரகால சிகிச்சையின் போது பயன்படுத்த ஸ்பூட்னிக் 5 தடுப்பூசியை உரிமம் வழங்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு தடுப்பூசிகளுக்காக பேச்சு வார்த்தைநமது நாட்டிலேயே தயாரிக்கப்படும் ஸ்பூட்னிக் 5 கொரோனா தடுப்பூசி ஜூலை மாதம் முதல் கிடைக்கத் தொடங்கும். ஸ்பூட்னிக் 5 கொரோனா தடுப்பூசி ஜூலை மாதத்துக்குள் 4 மில்லியன் டோஸ்களும், ஆகஸ்டு மாதத்துக்குள் 8 மில்லியன் டோஸ்களும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவை தவிர, பிபைசர், மடரெனா, ஜே அன்டு ஜே ஆகிய நிறுவனங்கள் தயாரித்துவரும் தடுப்பூசிகளை நமது நாட்டில் கிடைக்கச் செய்வதற்கு மேற்கண்ட நிறுவனங்களுடன் மத்திய அரசு கடந்த ஆண்டு ஜூலை தொடங்கி பேசி வருகிறது என அந்த பிரமாண பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது.