ஐகோர்ட்டு நீதிபதிகளின் கருத்துகளை செய்தியாக்குவதற்கு தடைவிதிக்க முடியாது; சுப்ரீம் கோர்ட்டு கருத்து


ஐகோர்ட்டு நீதிபதிகளின் கருத்துகளை செய்தியாக்குவதற்கு தடைவிதிக்க முடியாது; சுப்ரீம் கோர்ட்டு கருத்து
x
தினத்தந்தி 4 May 2021 1:07 AM IST (Updated: 4 May 2021 1:07 AM IST)
t-max-icont-min-icon

ஐகோர்ட்டுகளில் நீதிபதிகள் தெரிவிக்கும் கருத்துகளை செய்தியாக்குவதற்கு தடைவிதிக்க முடியாது என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.

ஐகோர்ட்டு எச்சரிக்கை

கரூர் தொகுதி வாக்கு எண்ணிக்கையின்போது கொரோனா தடுப்பு விதிகளை முழுமையாக பின்பற்றும் வகையில் தேவையான ஏற்பாடுகளை செய்யக்கோரி தமிழக போக்குவரத்து துறை அமைச்சரும், அ.தி.மு.க. வேட்பாளருமான விஜயபாஸ்கர் தொடர்ந்த வழக்கை சென்னை ஐகோர்ட்டு விசாரித்தது.அப்போது நீதிபதிகள், கொரோனா தடுப்பு விதிகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்யாமல், சமூக இடைவெளியின்றி அரசியல் கட்சிகள் இஷ்டம்போல் பிரசாரம் செய்ததே தொற்றுப் பரவலுக்கான காரணம். தேர்தல் ஆணையத்தின் மீது கொலைக்குற்றம் சுமத்தினாலும் தவறில்லை.

மே 2 வாக்கு எண்ணிக்கை நாளில் உரிய கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளை மேற்கொள்ளவில்லை என்றால் வாக்கு எண்ணிக்கையை நிறுத்திவைக்க நேரிடும் என வாய்மொழியாக எச்சரித்தனர்.

மேல்முறையீட்டு மனு

தமிழகம் முழுதும் வாக்கு எண்ணிக்கையின்போது கொரோனா சூழலை கருத்தில்கொண்டு உரிய பாதுகாப்பு ஏற்பாடு மேற்கொள்ளப்படும் என தேர்தல் ஆணையத்தின் சார்பில் உறுதி அளிக்கப்பட்டதை ஏற்று வழக்கை ஐகோர்ட்டு முடித்துவைத்தது. இதற்கிடையே, தேர்தல் ஆணையம் குறித்து சென்னை ஐகோர்ட்டு தெரிவித்த கருத்துகளுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் ஆணையத்தின் சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், எம்.ஆர்.ஷா ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று விசாரித்தது.

தடைவிதிக்க முடியாது

தேர்தல் ஆணையத்தின் சார்பில் மூத்த வக்கீல் ராகேஷ் துவிவேதி ஆஜராகி, தேர்தல் ஆணையத்துக்கு பதில் அளிக்க உரிய வாய்ப்பு வழங்காமல் தேர்தல் ஆணையத்தை சென்னை ஐகோர்ட்டு கண்டித்துள்ளது என்றார்.

அப்போது நீதிபதிகள், ‘தேர்தல் ஆணையம் தாக்கல் செய்துள்ள இடையீட்டு மனுவில், ஐகோர்ட்டு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதை மட்டுமே செய்தியாக்க வேண்டும். கருத்துகளை செய்தியாக்க தடைவிதிக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது. செய்திகளின் அடிப்படையில் எவ்வித புகாரும் பதிவு செய்யக்கூடாது என்றும் தெரிவித்துள்ளீர்கள். தேர்தல் ஆணையம் மிகவும் அனுபவம் பெற்ற அமைப்பாகும். கோர்ட்டில் நடைபெறும் வாதங்களை செய்தியாக்கக்கூடாது என இன்றைய காலகட்டத்தில் தடைவிதிக்க முடியாது. கோர்ட்டில் நடைபெறும் வாதங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. இதுதொடர்பான தேர்தல் ஆணையத்தின் கோரிக்கை நம்ப முடியாததாக உள்ளது.

ஒத்திவைப்பு

ஐகோர்ட்டு தெரிவித்த கருத்துகளை நல்ல பொருளில் எடுத்துக்கொள்ள வேண்டும். இதுதொடர்பான உத்தரவை எழுதும்போது தேர்தல் ஆணையத்தை கண்டித்துரைப்பதாக நினைக்கக்கூடாது என தெரிவித்தனர்.

அப்போது வக்கீல் ராகேஷ் துவிவேதி, கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் என்பது தேர்தல் ஆணையத்தின் வரம்பில் இல்லை. தேர்தல் ஆணையம் குறித்து ஐகோர்ட்டு தெரிவித்த கருத்துகள் ஊடகங்களில் விரிவாக விவாதிக்கப்பட்டன. இதனால் தேர்தல் ஆணையம் கடுமையாக புண்பட்டுள்ளதால் ஆட்சேபனையை தெரிவித்து இந்த மனுவை தாக்கல் செய்துள்ளது என்றார்.

கேவியட் மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் பிரதீப் யாதவ், இந்த விவகாரத்தில் ஐகோர்ட்டு தெரிவித்த கருத்துகள் சரியானவை. கொரோனா பரவிவரும் சூழலில் தேர்தலை ஓராண்டுக்கு தள்ளிவைத்து இருக்க வேண்டும் என வாதிட்டார்.

அதற்கு நீதிபதிகள், இந்த விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை இது இல்லை என தெரிவித்ததுடன், மேல்முறையீடு தொடர்பான உத்தரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர். உத்தரவு விரைவில் பிறப்பிக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.


Next Story