தமிழ்நாட்டில் தடுப்பூசி பற்றாக்குறை இல்லை: மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 3 Jun 2021 11:35 PM GMT (Updated: 3 Jun 2021 11:35 PM GMT)

தமிழ்நாட்டில் 7.24 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் இருப்பு உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி, 

தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசிகளுக்கு பற்றாக்குறை நிலவுவதாக ஊடகங்களில் வந்த தகவல்கள் தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று ஒரு விளக்க அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், “நாட்டில் இந்த ஆண்டு ஜனவரி 16-ந்தேதி முதல் முழு அரசு அணுகுமுறையின் கீழ் பயனுள்ள தடுப்பூசி திட்டத்துக்காக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முயற்சிகளுக்கு மத்திய அரசு ஆதரவு அளித்து வருகிறது. தடுப்பூசிகள் கிடைப்பதை ஒழுங்குபடுத்தும் வகையில், மத்திய அரசு தொடர்ந்து தடுப்பூசி உற்பத்தியாளர்களுடன் தொடர்பில் இருந்து வருகிறது. மேலும், மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் வெவ்வேறு கொள்முதல் வாய்ப்புகளை திறந்து விட்டுள்ளது.

தமிழ்நாட்டில் தடுப்பூசிக்கு பற்றாக்குறை நிலவுவதாக சில ஊடகங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளன. இவை உண்மையில் தவறானவை, எந்த அடிப்படையும் இல்லாதவை. தமிழ்நாட்டுக்கு ஜூன் 2-ந்தேதி (நேற்று முன்தினம்) நிலவரப்படி 1 கோடிக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசிகள் வினியோகிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 93.3 லட்சம் தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு விட்டன. 7.24 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் தமிழ்நாட்டில் இருப்பு உள்ளன.

ஜூன் 1-15 கால கட்டத்தில் மத்திய அரசின் வாயிலாக மாநிலத்துக்கு வழங்கப்படும் தடுப்பூசிகள் அளவு 7.48 லட்சம் ஆகும். ஜூன் 15-30 கால கட்டத்துக்கு 18.36 லட்சம் தடுப்பூசிகள் வினியோகிக்கப்படும். தடுப்பூசி ஒதுக்கீடு என்பது மொத்தம் கிடைக்கக்கூடிய தடுப்பூசியின் அளவு, மாநிலங்கள் அல்லது யூனியன் பிரதேசங்களின் சராசரி பயன்பாட்டு அளவு ஆகியவற்றின் அடிப்படையில் அமைகிறது.

18-44 வயதினருக்கான புதிய தாராளமயமாக்கப்பட்ட விலை நிர்ணயம் மற்றும் துரிதப்படுத்தப்பட்ட தேசிய கொரோனா தடுப்பூசி உத்தியின் கீழ் மாநிலத்துக்கு கிடைக்கக்கூடிய தடுப்பூசிகளின் அளவு குறித்தும் தமிழ்நாட்டுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. 18-44 வயதினருக்கான 3-ம் கட்ட தடுப்பூசி திட்டத்தின்கீழ், ஜூன் மாதத்தில் தமிழ்நாட்டுக்கு 16.83 லட்சம் தடுப்பூசிகள் கிடைக்கும்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story