சீனா செல்வதற்காக காத்திருக்கும் இந்தியர்களுக்கு விசா வழங்க வேண்டும் - இந்திய அரசு வலியுறுத்தல்


சீனா செல்வதற்காக காத்திருக்கும் இந்தியர்களுக்கு விசா வழங்க வேண்டும் - இந்திய அரசு வலியுறுத்தல்
x
தினத்தந்தி 12 Jun 2021 9:34 AM GMT (Updated: 12 Jun 2021 9:34 AM GMT)

சீனாவிற்கு செல்வதற்காக காத்திருக்கும் இந்தியர்களுக்கு விசா வழங்குமாறு, சீன அரசை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

புதுடெல்லி,

கொரோனா நோய் பரவல் ஏற்படுவதற்கு முன்பு, சீனாவில் சுமார் 55 ஆயிரம் இந்தியர்கள் வேலை மற்றும் உயர்கல்விக்காக வசித்து வந்தனர். இதில் சுமார் 20 ஆயிரம் பேர் சீன உயர்கல்வி நிறுவனங்களில் இந்திய மாணவர்களும் கல்வி பயின்று வந்த மாணவர்கள் ஆவர்.  

இந்த நிலையில் கடந்த ஆண்டு உருவான கொரோனா முதல் அலையின் காரணமாக, ஏராளமான இந்தியர்கள் சொந்த நாட்டிற்கு திரும்பினர். 2020 நவம்பர் முதல் இவர்கள் யாரும் சீனாவிற்கு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சீனாவில் இருந்து இந்தியாவிற்கு திரும்பியவர்களின் விசாக்களை, சீன அரசு கடந்த ஆண்டு அதிரடியாக ரத்து செய்ததே இதற்கு காரணமாகும்.

சீனாவிற்கு இனி செல்ல வேண்டுமானால், சீனாவில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டவர்களுக்கு மட்டுமே விசா வழங்கப்படும் என்று டெல்லியில் உள்ள சீன தூதரகம் கடந்த மார்ச் மாதம் அறிவித்தது. இதையடுத்து சீன தடுப்பூசிகளை செலுத்திக் கொண்ட இந்தியர்கள் பலர், சீனா செல்ல விசா கோரி விண்ணப்பித்துள்ள நிலையில், அவர்கள் யாருக்கும் இதுவரை விசா வழங்கப்படவில்லை என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.  

அதே சமயம் சீனர்கள் இந்தியாவிற்கு வருவதை சீன அரசு தடை செய்யவில்லை. இருப்பினும் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், சீன மக்கள் வேறு நாடுகளின் வழியாக இந்தியாவிற்கு வருவது தொடர்கதையாகி உள்ளது. இதனால் இந்தியா-சீனா இடையே இருவழி பயணம் அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் சீனாவில் இருந்து திரும்பியவர்களுக்கு விரைவில் விசா வழங்க வேண்டும் என்றும் சீனாவிடம் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

Next Story