நாளை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்; டெல்லியில் அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது

நாளை நடைபெறும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடருக்கு முன்னதாக, இன்று அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
புதுடெல்லி,
17-ஆவது மக்களவையின் 6-ஆவது கூட்டத்தொடரான மழைக்கால கூட்டத்தொடர் நாளை (திங்கள்கிழமை) தொடங்கி ஆகஸ்ட் 13-ஆம் தேதி நிறைவடைய உள்ளது. கூட்டத்தொடரை முன்னிட்டு நாடாளுமன்ற வளாகத்தில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளும், நோய்தொற்றுக்கான சுகாதார ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. கூட்டத்தொடர் வழக்கமான நேரமான காலை 11 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறும்.
கடந்த கூட்டத்தொடா்களைப் போலவே நோய்த்தொற்றுக்கான பாதுகாப்பை முன்னிட்டு சமூக இடைவெளியுடன் இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மக்களவையில் தற்போதுள்ள 539 உறுப்பினா்களில் 280 போ் வழக்கமான மக்களவை இருக்கைகளிலும், மீதமுள்ள 259 போ் பார்வையாளா் மாடத்திலும் அமரவைக்கப்பட உள்ளனர். கொரோனா நோய்த்தொற்றை முன்னிட்டு இந்தக் கூட்டத்தொடரில் பார்வையாளா்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மழைக்கால கூட்டத்தொடரில் 40 மசோதாக்கள், 5 அவசர சட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
வழக்கமாக, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை மாதத்தின் மூன்றாவது வாரத்தில் தொடங்கி, ஆகஸ்ட் மாதத்தில் சுதந்திர தின விழாவுக்கு முன்பாக முடிவடையும். அதுபோலவே, இந்த ஆண்டும் கூட்டத்தொடர் தொடங்குகிறது. இந்தக் கூட்டத்தொடரில் மொத்தம் 19 அமர்வுகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தொடரில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்னைகளை எழுப்பவுள்ளன. இந்த சூழலில் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரை சுமுகமாக நடத்தும் வகையில், அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்த மத்திய அரசு முடிவு செய்தது.
இந்நிலையில் நாளை நடைபெறும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடருக்கு முன்னதாக, இன்று அனைத்துக்கட்சி கூட்டம், நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு கட்சிகளின் எம்.பி.க்கள் பங்கேற்றுள்ளனர். நாடாளுமன்றத்தை சுமுகமாக நடத்துவது பற்றி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
Related Tags :
Next Story