ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்க சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு கோரிக்கை


ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்க சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு கோரிக்கை
x
தினத்தந்தி 26 July 2021 6:28 PM GMT (Updated: 26 July 2021 6:47 PM GMT)

ஜெயலலிதாவின் மரணத்தை விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்குமாறு சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு கோரிக்கை விடுத்தநிலையில்,விசாரணை ஆகஸ்டு மாதத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஆறுமுகசாமி விசாரணைக்கு தடை
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்து உள்ளது. இந்த தடை உத்தரவை ரத்து செய்யவும், வழக்கை விரைந்து விசாரிக்க கோரியும் தமிழக அரசு சார்பில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக கடந்த ஆண்டு (2020) டிசம்பர் 10-ந்தேதி நடைபெற்ற விசாரணையின்போது, ஆறுமுகசாமி ஆணையத்தின் அனைத்து விசாரணைக்கும் விதித்த இடைக்கால தடையை நீக்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்ததுடன் வழக்கு விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளிவைத்தது.

இடையீட்டு மனு
இந்த நிலையில் ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு விதிக்கப்பட்டுள்ள இடைக்கால தடையை நீக்கக்கோரி தமிழக அரசு சார்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் எஸ்.அப்துல் நசீர், கிருஷ்ண முராரி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நடைபெற்றது. அப்போது தமிழக அரசின் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் துஷ்யந்த் தவே, வக்கீல் எஸ்.ஜோசப் அரிஸ்டாட்டில் ஆகியோர் ‘ஜெயலலிதாவின் மரணத்தை விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்கக்கோரும் தமிழக அரசின் மனுவையும், அப்பல்லோ ஆஸ்பத்திரியின் மேல்முறையீட்டு மனுவையும் நாளையோ அல்லது வெள்ளிக்கிழமையோ சேர்த்து விசாரிக்க வேண்டும். ஏனெனில் ஆறுமுகசாமி ஆணையத்துக்கு தமிழக அரசு மாதந்தோறும் 6 லட்சம் ரூபாயை செலவிட்டு வருகிறது. 2017-ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் பதவிக்காலம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆணையத்தின் விசாரணை 90 சதவீதம் நிறைவடைந்து விட்டது. எனவே, ஜெயலலிதாவின் மரணத்தை விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி, ஆணையத்தின் விசாரணையை தொடர அனுமதித்து விசாரணை அறிக்கையை சீலிட்ட உறையில் சமர்ப்பிக்க அனுமதிக்க வேண்டும்’ என வாதிட்டனர்.இதற்கு அப்பல்லோ ஆஸ்பத்திரி் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் அரிமா சுந்தரம் ஆட்சேபம் தெரிவித்தார்.

ஆறுமுகசாமி ஆணையத்தின் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் ரஞ்சித் குமார், ‘125 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளன. விசாரணையை நிறைவு செய்ய ஆணையம் 4 ஆண்டுகள் காத்திருக்கிறது, எனவே விசாரணைக்கு விதிக்கப்பட்டுள்ள இடைக்கால தடையை நீக்கி அறிக்கையை தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும்’ என வாதிட்டார்.வழக்கில் மூன்றாவது எதிர் மனுதாரரான சசிகலா சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் அமித் ஆனந்த் திவாரி, ‘ஆணையத்தில் சாட்சியம் அளித்தவர்களை குறுக்கு விசாரணை செய்ய அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது’ என வாதிட்டார்.

ஆகஸ்டு இறுதியில் விசாரணை
அப்போது நீதிபதிகள், இறுதி விசாரணைக்கு தயாராகுமாறு தெரிவித்தனர். ஜெயலலிதாவின் மரணத்தை விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரிய தமிழக அரசின் இடைக்கால மனு, அப்பல்லோ மருத்துவமனையின் மேல்முறையீடு மனு மீதான விசாரணை ஆகஸ்ட் இறுதி வாரத்தில் நடைபெறும் என தெரிவித்தனர்.

Next Story