தனியார்துறையிலும் இடஒதுக்கீட்டுக்கு சட்டம் இயற்ற வேண்டும் - மக்களவையில் திருமாவளவன் பேச்சு


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 11 Aug 2021 3:01 AM IST (Updated: 11 Aug 2021 3:01 AM IST)
t-max-icont-min-icon

50 சதவீத உச்சவரம்பை தகர்த்து எறியும் வகையில் அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வரவேண்டும் என்று மக்களவையில் திருமாவளவன் தெரிவித்தார்.

புதுடெல்லி, 

இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை முடிவு செய்யும் உரிமையை மாநில அரசுகளுக்கு வழங்க வகை செய்யும் சட்டத்திருத்த மசோதா மீது மக்களவையில் நேற்று விவாதம் நடைபெற்றது. 

இதில் பங்கேற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தமிழில் ஆவேசமாக பேசினார். அவர் பேசியதாவது:-

இதர பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே வழங்கி இருந்த தீர்ப்பு, மாநில அரசுகளின் உரிமைகளை பறிக்கும் வகையில் அமைந்தது. இதனை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் சார்பில் அறிக்கை வெளியிட்டோம். அதன் அடிப்படையில் இந்த மசோதாவை தற்போது வரவேற்க கடமைப்பட்டு உள்ளோம். ஆனால் இந்த மசோதாவை கொண்டு வந்ததன் மூலம் இந்த அரசு இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தின் நலன்களுக்கான அரசு, மாநில உரிமைகளை பாதுகாக்கிற அரசு என்ற தோற்றத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாக தெரிகிறது. ஆனால் எந்த வகையிலும் இந்திய மக்கள் இந்த அரசை நம்பமாட்டார்கள்.

மண்டல் கமிஷன் பரிந்துரையை நடைமுறைப்படுத்த இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இடஒதுக்கீட்டை தருவதற்கு வி.பி.சிங் முன்வந்தபோது மிகப்பெரிய வன்முறை வெறியாட்டத்தை கட்டவிழ்த்து விட்ட கட்சி எது என்பதை நாட்டு மக்கள் அறிவார்கள். இடஒதுக்கீடு கொடுக்கக்கூடாது என்று வன்முறையை கட்டவிழ்த்து விட்டதோடு மட்டுமல்லாமல், ரத யாத்திரை என்ற பெயரில் ரத்த யாத்திரை நடத்திய கட்சிதான் பா.ஜ.க. அது சமூக நீதிக்கு எதிரான கட்சி, தலித், பழங்குடி மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எதிரான கட்சி என்பதை மக்கள் நன்கு அறிவார்கள்.

இந்த அரசுக்கு உண்மையிலேயே சமூகநீதி மீது அக்கறை இருக்குமானால், சுப்ரீம் கோர்ட்டு விதித்து இருக்கிற 50 சதவீத உச்சவரம்பை தகர்த்து எறியும் வகையில் அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வரவேண்டும். தனியார்துறையிலும் இடஒதுக்கீட்டை கொண்டுவர சட்டம் இயற்ற வேண்டும் என்று அவர் பேசினார்.

Next Story