சமீர் வாங்கடே மீதான நவாப் மாலிக்கின் குற்றச்சாட்டுகள்: கவர்னர் தலையிட மராட்டிய பாஜக கடிதம்


சமீர் வாங்கடே மீதான நவாப் மாலிக்கின் குற்றச்சாட்டுகள்: கவர்னர் தலையிட மராட்டிய பாஜக கடிதம்
x
தினத்தந்தி 27 Oct 2021 10:36 AM GMT (Updated: 27 Oct 2021 10:36 AM GMT)

சமீர் வாங்கடே மீது நவாப் மாலிக் கூறும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் விவகாரத்தில் மராட்டிய கவர்னர் தலையிட வேண்டும் என்று பாஜக கடிதம் எழுதியுள்ளது.

மும்பை,

சொகுசு கப்பலில் போதை விருந்தில் பங்கேற்றதாகவும், போதைபொருள் பயன்படுத்தியதாகவும் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானை கடந்த 2-ம் தேதி மும்பை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். கைது செய்யப்பட்டுள்ள ஆர்யன் கான் தனக்கு ஜாமீன் தரக்கோரி 3-வது முறையாக கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீது மும்பை ஐகோர்ட்டில் இன்று விசாரணை நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில், ஆர்யன் கானை கைது செய்த மும்பை போதைப்பொருள் தடுப்பு பிரிவின் தலைமை அதிகாரியாக செயல்பட்டு வருபவர் சமீர் வான்கடே. 

ஆர்யன் கான் கைது செய்யப்பட்டதில் இருந்து சமீர் வான்கடேவை குறிவைத்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மராட்டிய மந்திரியுமான நவாப் மாலிக் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகிறார். ஆர்யன் கானை திட்டமிட்டு இந்த சதிவலையில் சிக்கவைத்துள்ளனர் எனவும் அவர் தெரிவித்து வருகிறார்.

மேலும், போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரியான சமீர் வான்கடே போலியான சான்றிதழ்களை கொடுத்து வேலைக்கு சேர்ந்துள்ளார் என நவாப் மாலிக் குற்றஞ்சாட்டியுள்ளார். அதேவேளை ஆர்யன் கானை விடுதலை செய்ய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் 25 கோடி ரூபாய் லஞ்சம் பெற பேரம் பேசியதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அடுத்தடுத்து வெளியாகும் இந்த தகவல்களால் மராட்டிய அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி சமீர் வான்கடே மீது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை மந்திரி நவாப் மாலிக் சுமத்தி வருவதாகவும், இந்த விவகாரத்தில் கவர்னர் தலையிட வேண்டும் எனவும் கவர்னர் பகத் சிங் கோஷ்யாரிக்கு மராட்டிய பாஜக கடிதம் எழுதியுள்ளது.

இதற்கிடையில், போதைப்பொருள் வைத்திருந்த வழக்கில் மந்திரி நவாப் மாலிக்கின் மருமகன் சமீர் கானை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கடந்த ஜனவரி மாதம் 13-ம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர். கிட்டத்தட்ட 8 மாதங்கள் சிறையில் இருந்த சமீர் கான் கடந்த மாதம் 27-ம் தேதி ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். 

சமீர் கான் ஜாமீனில் வெளியே வந்த பின்னர் இந்த வழக்கில் வேண்டுமென்ற தனது மருமகன் கைது செய்யப்பட்டதாகவும், அவரது அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் போதைப்பொருள் எதுவும் கைப்பற்றப்படவில்லை என்று கூறினார்.

சமீர் கான் கைது நடவடிக்கை போதைபொருள் தடுப்பு அமைப்பின் மும்பை பிரிவு அதிகாரி சமீர் வான்கடே தலைமையின் கீழ் செயல்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தனது மருமகனின் கைது நடவடிக்கைக்கு பழிவாங்கும் நடவடிக்கையாகவே ஆர்யன்கான் விவகாரத்தில் சமீர் வான்கடே மீது மந்திரி நவாப் மாலிக் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை எழுப்பி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Next Story