கொரோனா பரவலால் கர்நாடகத்தில் பொருளாதாரம் பாதிப்பு - பசவராஜ் பொம்மை கவலை


கொரோனா பரவலால் கர்நாடகத்தில் பொருளாதாரம் பாதிப்பு - பசவராஜ் பொம்மை கவலை
x
தினத்தந்தி 28 Jan 2022 8:02 PM GMT (Updated: 28 Jan 2022 8:02 PM GMT)

கர்நாடகத்தில் கொரோனா பரவலால் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறினார்.

பெங்களூரு,

கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்-மந்திரியாக பசவராஜ்பொம்மை பொறுப்பு வகித்து வருகிறார். அவர் முதல்-மந்திரியாக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 6 மாதங்கள் நிறைவடைந்தது.

இதையடுத்து கடந்த 6 மாதங்களில் அமல்படுத்தப்பட்ட திட்டங்கள், சாதனைகள் குறித்த கையேடு வெளியீட்டு விழா பெங்களூரு விதான சவுதாவில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கலந்து கொண்டு, அந்த கையேட்டை வெளியிட்டு பேசியதாவது:-

“கர்நாடகம் கடவுளின் ஆசி உள்ள மாநிலம். இயற்கை வளங்கள் கொட்டி கிடக்கின்றன. கிருஷ்ணா, காவிரி, மல்லபிரபா, கட்டப்பிரபா, நேத்ராவதி, துங்கா, பத்ரா என பல்வேறு ஆறுகள் ஓடுகின்றன. இதனால் 10 விவசாய மண்டலங்கள் உள்ளன. 365 நாட்களும் ஏதாவது ஒரு மண்டலத்தில் விவசாய உற்பத்திகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த வாய்ப்பு வேறு எந்த மாநிலத்திற்கும் கிடையாது.

கர்நாடகத்தில் உற்பத்தி ஆகும் இரும்பு தாதுவுக்கு உலக அளவில் வரவேற்பு உள்ளது. இந்த வளங்களை பயன்படுத்தி கர்நாடகம் முன்னேற்றம் அடைய நாம் பாடுபட வேண்டும். மேலும் கர்நாடகத்தில் விடுதலை போராட்ட வீரர்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது.

நீர், நிலம், மொழி பிரச்சினை வரும்போது அரசியல் செய்யாமல் அனைத்துக்கட்சிகளும் ஒற்றுமையாக இணைந்து செயல்படுகின்றன. இது நமது கலாசாரம், பரம்பரை. கர்நாடகத்தில் தரமான எண்ணெய் வித்துக்கள் உள்ளன. சிறப்பான பருத்தி சாகுபடி செய்யப்படுகிறது. அத்துடன் தொழில் வளத்திலும் கர்நாடகம் முன்னிலையில் உள்ளது.

உற்பத்தி துறையில் கர்நாடகம் முதல் இடத்தில் உள்ளது. ஏராளமான தொழில் நிறுவனங்கள் உள்ளன. மத்திய அரசின் முன்னணி அமைப்புகள் அதாவது இஸ்ரோ, எச்.ஏ.எல். உள்ளிட்டவை இருக்கின்றன. பல்வேறு ஆராய்ச்சி நிறுவனங்கள் கர்நாடகத்தில் செயல்பட்டு வருகின்றன. இவற்றை நாம் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இருக்கும் வளங்களை சரியாக பயன்படுத்தினால் மட்டுமே வெற்றி பெற முடியும்.

கொரோனா பரவும் இந்த நேரத்தில் ஒருபுறம் மக்களின் உயிர்களை காக்க வேண்டும். அத்துடன் அவர்களின் வாழ்வாதாரங்களையும் பாதுகாக்க வேண்டும். கொரோனாவால் மாநிலத்தின் பொருளாதாரம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று எனது மனம் துடிக்கிறது. ஆனால் பொருளாதார வளம் பற்றாக்குறையாக உள்ளது.

ஆனால் மக்களின் நலனுக்காக பணியாற்றுகிறேன். சுயநலத்திற்கு நான் இடம் கொடுக்கவில்லை. நாட்டில் பசுமை புரட்சி ஏற்பட்டுள்ளது. ஆனால் விவசாயிகள் பொருளாதார ரீதியாக பாதுகாப்பற்ற நிலையில் இருக்கிறார்கள். அவர்களால் தங்களின் குழந்தைகளுக்கு நல்ல கல்வியை வழங்க முடியவில்லை. அதனால் தான் விவசாயிகளின் குழந்தைகளுக்கு கல்வி உதவி திட்டத்தை தொடங்கியுள்ளோம்.

தொழிலாளர்களின் குழந்தைகளுக்கும் கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தை அமல்படுத்தியுள்ளோம். தனி நபர் வருமானத்தில் கர்நாடகம் 4-வது இடத்தில் உள்ளது. இந்த தனிநபர் வருமானத்திற்கு 30 சதவீதம் பேர் மட்டுமே பங்களிப்பு வழங்குகிறார்கள். புதிய வேலை வாய்ப்பு கொள்கையை உருவாக்கியுள்ளோம். முழுமையான விவசாயத்தை மேற்கொள்ளும் வகையில் திட்டத்தை அமல்படுத்தியுள்ளோம்.

விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்காக உயர்த்த அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மீன், தோட்டக்கலை, பட்டு வளர்ப்பு தொழில் செய்ய விவசாயிகளுக்கு வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கிறோம். 45 சதவீத அன்னிய நேரடி முதலீடுகள் கர்நாடகத்திற்கு வந்துள்ளன. இது பெருமையான விஷயம். தொழில்-விவசாயம் இரண்டும் மிக முக்கியம்.”

இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.

இந்த விழாவில் மந்திரிகள் ஆர்.அசோக், ஈசுவரப்பா, உமேஷ்கட்டி, சோமண்ணா, எஸ:.டி.சோமசேகர், சுதாகர், தலைமை செயலாளர் ரவிக்குமார் உள்பட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கொரோனா பரவல் காரணமாக குறைந்த எண்ணிக்கையிலேயே விருந்தினர்கள் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டனர்.

Next Story