இந்தியா-வங்காளதேச எல்லை அருகே சீன நாட்டின் ட்ரோன் விழுந்து கிடந்ததால் பரபரப்பு


இந்தியா-வங்காளதேச எல்லை அருகே சீன நாட்டின் ட்ரோன் விழுந்து கிடந்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 20 March 2022 5:57 PM IST (Updated: 20 March 2022 6:16 PM IST)
t-max-icont-min-icon

இந்தியா-வங்காளதேச எல்லை அருகே உள்ள விவசாயின் நிலத்தில் சீனாவைச் சேர்ந்த ட்ரோன் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கொல்கத்தா,

மேற்கு வங்காள மாநிலம் பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள பெட்ராபோல் பகுதியில், பங்கஜ் சர்கார் என்பவருக்குச் சொந்தமான விவசாய நிலம் உள்ளது. இந்நிலையில் நேற்று காலை 6 மணியளவில் பங்கஜ் சர்கார், தனது நிலத்தில் ஆளில்லா விமானம்(ட்ரோன்) ஒன்று விழுந்து கிடந்ததை பார்த்துள்ளார். அது யாருடையது என்பது தெரியாததால், அதனை பெட்ராபோல் காவல்நிலையத்தில் ஒப்படைத்தார்.

அந்த ட்ரோனை ஆய்வு செய்த போலீசார், அது யாருடையது என்பது குறித்து விசாரணை நடத்தினர். பங்கஜ் சர்காரின் விவசாய நிலம், இந்தியா-வங்காளதேசம் சர்வதேச எல்லைக் கோட்டில் இருந்து 300 மிட்டர் தொலையில் தான் அமைந்துள்ளது. எனவே, இந்த ட்ரோன் எல்லை தாண்டி வந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்ததால், இது குறித்து எல்லை பாதுகாப்பு படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

இதையடுத்து எல்லை பாதுகாப்பு படையின் தெற்கு வங்க பிரிவு நடத்திய விசாரணையில், அந்த ட்ரோன் சீனாவில் தயாரிக்கப்பட்டது என்பது தெரியவந்துள்ளது. மேலும் அது எஸ்-500 என்ற மாடலைச் சேர்ந்த ட்ரோன் என்றும் அதில் கேமரா எதுவும் பொருத்தப்படவில்லை என்றும் எல்லை பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதே சமயம் மார்ச் 18 ஆம் தேதி இரவு 10 மணியளவில், அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த நபர்கள் சிலர் வானில் அடையாளம் தெரியாத பொருள் பறந்து சென்றதை பார்த்ததாகவும், அதில் இருந்து வெளிச்சம் ஒளிர்ந்து சிறிது நேரத்தில் காணாமல் போனதாகவும் தெரிவித்துள்ளனர். 

எல்லை பாதுகாப்பை மீறி கடத்தலில் ஈடுபடுவதற்காக இந்த ட்ரோன் பயன்படுத்தப்பட்டுள்ளதா, அல்லது யாரேனும் உள்ளூர் நபர்கள் அதனை பயன்படுத்தினார்களா என்பது குறித்து விசாரித்து வருவதாக எல்லை பாதுகாப்பு படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story