கர்நாடகாவில் முதல்-மந்திரி பதவி உட்பட ஒட்டுமொத்த மந்திரிசபையில் அதிரடி மாற்றமா? அமித்ஷா வருகையால் பரபரப்பு


கர்நாடகாவில் முதல்-மந்திரி பதவி உட்பட ஒட்டுமொத்த மந்திரிசபையில் அதிரடி மாற்றமா? அமித்ஷா வருகையால் பரபரப்பு
x
தினத்தந்தி 2 May 2022 6:21 PM IST (Updated: 2 May 2022 6:21 PM IST)
t-max-icont-min-icon

பசவராஜ் பொம்மையை மாற்றுவது, கட்சிக்கு இந்த நேரத்தில் பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.

பெங்களூரு,

கர்நாடக முதல்-மந்திரியாக  பசவராஜ் பொம்மை பொறுப்பேற்று ஒன்பது மாதங்களுக்குப் பிறகு, அவர் மாற்றப்படுவார் என்ற வதந்திகள் பரவி வருகின்றன. மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா இன்று பெங்களூருவுக்கு வருகை தந்திருப்பது யூகங்களுக்கு மேலும் வலு சேர்த்துள்ளது.

கர்நாடகாவில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி, அம்மாநிலத்தில் மந்திரிசபை மாற்றம் அல்லது விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று பாஜக எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தி வந்தனர். ஆனால், ஐந்து மாநில தேர்தல் நடைபெற்றதால், மந்திரிசபை  விரிவாக்கம் தள்ளிப்போனது. தற்போது, தேர்தல் முடிந்து 4 மாநிலங்களில் மீண்டும் பாஜக ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளது. இதையடுத்து, மந்திரிசபை மாற்றியமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை கர்நாடக எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் எழுப்பத் தொடங்கியுள்ளனர்.

இந்த நிலையில், மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா இன்று இரவு கர்நாடக மாநிலம் செல்லவுள்ளார். பெங்களூருவில் நாளை நடைபெறவுள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்கிறார். 

அமித் ஷாவின் இந்த பயணத்தின் போது, கர்நாடக மந்திரிசபை மாற்றம் குறித்து அவர் முதல் மந்திரி பசவராஜ் பொம்மையுடன் ஆலோசிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அம்மாநில அரசாங்கம் ஊழல் தொடர்பான பிரச்சினைகளை எதிர்கொள்வதாலும், தேர்தலுக்கு ஓராண்டுக்கும் குறைவாக உள்ளதாலும், பல புதிய முகங்களுக்கு தலைமைப் பொறுப்புகள் வழங்கப்படலாம் என்பதாலும், அமித் ஷாவின் பெங்களூரு வருகை முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

இதனிடையே, பாஜக தேசிய பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் மைசூருவில் பேசியது கர்நாடக பாஜகவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அவர் பேசியதாவது:- 

“தலைமை மாற்றம்தான் பாஜகவின் பலம், புது முகங்களை அறிமுகப்படுத்தி டெல்லி மற்றும் குஜராத்தில் மாநகராட்சித் தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளோம். தற்போதைய எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களை ஒதுக்கி வைத்துவிட்டு, புதிய முகங்களை அறிமுகப்படுத்தினோம்” என்று கூறினார்.

அதென்ன குஜராத் மாடல், கட்சியின் நலனுக்காக கர்நடகாவில் எடியூரப்பா பதவி விலகியது போல, பாஜக ஆளும் குஜராத்தில் முதல் மந்திரியாக இருந்துவந்த விஜய் ரூபானி,  கடந்த ஆண்டு செப்டம்பரில்  அவரும் பதவி விலகி அதிர்ச்சியை ஏற்படுத்தினார். அதன் பின், அங்கு பாஜகவின் பூபேந்திர பட்டேல் முதல் மந்திரியாக பொறுப்பேற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதே போல், பாஜக தேசிய பொது செயலாளர் சிடி ரவி பேசியுள்ளதும் கவனிக்கத்தக்கது. அவர் பேசியதாவது:- “நாம் எங்கு பலவீனமாக இருக்கிறோமோ, அங்கெல்லாம் மாற்றம் தவிர்க்க முடியாதது. பலவீனமான தலைவர்களை கட்சி ஊக்குவிக்காது. எங்களிடம் சொந்தமாக கர்நாடக மாடல் உள்ளது. எனவே, குஜராத், பஞ்சாப் மாடல்கள் இங்கு இருக்காது” என்று கூறினார்.

மந்திரிசபை விரிவாக்கத்தில் அமைச்சர் பதவிகளை தேடி அலைபவர்களால் இத்தகைய சலசலப்பு உருவாக்கப்பட்டது என்று முதல் மந்திரியின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பசவராஜ் பொம்மையை மாற்றுவது, கட்சிக்கு இந்த நேரத்தில் பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.

முன்னாள் முதல் மந்திரியும் கர்நாடக பாஜகவின் மூத்த முக்கிய தலைவருமான எடியூரப்பா இது குறித்து கூறுகையில், “தற்போதைய முதல் மந்திரியாக உள்ள பசவராஜ் பொம்மை சிறப்பாக செயல்படுவதால் என்னைப் பொறுத்தவரை தலைமை பொறுப்பில் மாற்றம் ஏற்படாது” என்று கூறி முற்றுப்புள்ளி வைத்தார்.

இதனிடையே, 8 முதல் 10 புதிய முகங்கள் அமைச்சரவையில் இடம்பெறலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.ஆட்சி மற்றும் கட்சி இரண்டிலும் மாற்றம் ஏற்படாவிட்டால், மாநிலத்தில் ஆட்சியைத் தக்கவைப்பது பாஜகவுக்கு கடினமாக இருக்கும் என்று பாஜகவின் உட்கட்சி கணித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே, அமித் ஷாவின் வருகை மிகப்பெரிய மாற்றத்தை அம்மாநில பாஜகவில் ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.


Next Story