“பாஜக எழுதி கொடுத்ததை அவர் பேசியுள்ளார்” - ஹர்திக் படேலின் சிக்கன் சாண்ட்விச் கருத்துக்கு காங்கிரஸ் பதிலடி!
பாஜக முடிவு செய்யாமல் இருந்திருந்தால், அனைவரின் வார்த்தைகளும் ஒரே மாதிரியாக இருந்திருக்காது.
புதுடெல்லி,
குஜராத் காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் ஆக இருந்த ஹர்திக் படேல் இன்று காங்கிரசில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
காங்கிரசில் இருந்து விலகுவதாக ராஜினாமா கடிதத்தை கட்சி தலைவர் சோனியா காந்திக்கு அனுப்பினார். அதில் அவர் தெரிவித்த விஷயம் சர்ச்சையை கிளப்பியுள்ளது. காங்கிரஸ் கட்சி தலைவர்களை கடுமையாக விமர்சித்து தனது ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். அவர் கூறியதாவது,
“குஜராத்தில் உள்ள காங்கிரஸ் தலைவர்கள் மாநில பிரச்சினைகளில் இருந்து வெகு தொலைவில் உள்ளனர். அதே வேளையில், டெல்லியில் இருந்து வரும் கட்சி தலைவர்களுக்கு ‘சிக்கன் சாண்ட்விச்’ வழங்கி உபசரிப்பதில் அதிக கவனம் செலுத்துகின்றனர். சரியான நேரத்தில் அது டெலிவரி செய்யப்படுகிறது.
காங்கிரசை சரியான திசையில் வழிநடத்த பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அக்கட்சி தொடர்ந்து நாடு மற்றும் சமூகத்தின் நலன்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது.நான் மூத்த தலைவர்களை சந்திக்கும் போதெல்லாம், குஜராத் மக்களின் பிரச்சனைகளை கேட்பதில் தலைவர்களுக்கு உண்மையில் ஆர்வமில்லை. ஆனால் தங்களுடைய மொபைலுக்கு என்ன செய்திகள் வருகின்றன என்பதில் அதிக ஈடுபாடு கொண்டிருப்பதை நான் எப்போதும் உணர்ந்தேன்...” என கூறினார்.
இதனையடுத்து, ஹர்திக் படேல் கட்சியில் இருந்து ராஜினாமா செய்தது குறித்து காங்கிரஸ் எம்.பி., சக்திசிங் கோஹில் விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது,
“இவையெல்லாம் காங்கிரஸில் இருந்து விலகிய ஒருவரின் குற்றச்சாட்டுகள் அல்ல. இவை அனைத்தும் பாஜகவால் எழுதப்பட்டவை. அவர்கள் அதனை சத்தமாக பேசுகிறார்கள்.பாஜக முடிவு செய்யாமல் இருந்திருந்தால், அனைவரின் வார்த்தைகளும் ஒரே மாதிரியாக இருந்திருக்காது.
சில நாட்களுக்கு முன்பு தான், ராகுல் காந்தியுடன் மேடையை பகிர்ந்து கொண்டிருந்தீர்கள். அப்படியிருக்கும் போது, கட்சியின் தலைமைத்துவம் பற்றி பேசினால் எப்படி..?
தலைவர்களை சந்திக்க விடாமல் அவரை தடுத்தது யார்? எங்களிடம் உள்கட்சி ஜனநாயகம் உள்ளது. உள்கட்சி ஜனநாயகத்திற்கும் ஒழுக்கமின்மைக்கும் இடையே மெல்லிய கோடு தான் உள்ளது. பாஜகவில் உள்கட்சி ஜனநாயகம் என்பது இல்லை”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story