மத்திய பிரதேசம்: பட்டாசு ஆலையில் பயங்கர தீ விபத்து - 11 பேர் பலி


மத்திய பிரதேசம்: பட்டாசு ஆலையில் பயங்கர தீ விபத்து - 11 பேர் பலி
x
தினத்தந்தி 6 Feb 2024 8:32 AM GMT (Updated: 6 Feb 2024 10:16 AM GMT)

இந்த தீ விபத்தில் படுகாயமடைந்த 50 பேரை போலீசார் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

போபால்,

மத்திய பிரதேச மாநிலம் ஹர்தா நகரில் பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் இன்று திடீரென தீப்பற்றி ஏறிய தொடங்கியது. மேலும் ஆலையில் உள்ள பட்டாசுகள் அனைத்தும் வெடிக்க தொடங்கின. இந்த கோர தீ விபத்தில் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த விபத்தில் 50 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் பற்றி தீயணைப்பு துறையினருக்கும், போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர். மேலும் படுகாயமடைந்தவர்களை மீட்டு போலீசார் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விபத்துக்கான காரணம் பற்றி விசாரித்து வருகின்றனர். இந்த விபத்தில் ஆலைக்குள் மேலும் சிலர் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இந்த விபத்து தொடர்பாக மத்திய பிரதேச முதல்-மந்திரி மோகன் யாதவ், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு சம்பவம் குறித்த விவரங்களை கேட்டறிந்தார். மேலும் மந்திரி உதய் பிரதாப் சிங், கூடுதல் தலைமைச் செயலாளர் அஜித் கேசரி மற்றும் இயக்குநர் ஜெனரல் ஹோம் கார்டு அரவிந்த் குமார் ஆகியோரை ஹெலிகாப்டர் மூலம் ஹர்தாவுக்கு விரைந்து செல்லுமாறு முதல்-மந்திரி உத்தரவிட்டுள்ளார்.

இந்த விபத்து தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வெளியாகியுள்ளது. அதில் தொடர் வெடிப்பால் ஆலைக்கு அருகில் உள்ள மக்கள் தங்கள் உயிர்களை காப்பாற்றி கொள்வதற்காக ஓடும் காட்சிகள் மனதை பதபதைக்க வைக்கிறது.




Next Story