4 நாட்களுக்கு முன் மாயமான சிறுமி கை, கால் கட்டப்பட்டு கொடூர கொலை - சாக்கடையில் பிணமாக மீட்பு


4 நாட்களுக்கு முன் மாயமான சிறுமி கை, கால் கட்டப்பட்டு கொடூர கொலை - சாக்கடையில் பிணமாக மீட்பு
x
தினத்தந்தி 6 March 2024 1:51 AM GMT (Updated: 6 March 2024 7:52 AM GMT)

சிறுமியின் உடல் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சாக்கடைக்குள் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

புதுச்சேரி,

புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலைநகர் பாடசாலை பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்த சிறுமி கடந்த 2-ந்தேதி மதியம் 2 மணியளவில் வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென மாயமானாள்.

சிறுமியை அவளது பெற்றோர் அக்கம் பக்கத்து வீடுகள், நண்பர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சிறுமியை தேடி வந்தனர். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். ஒரு கேமரா பதிவில் சிறுமி மட்டுமே தனியாக அப்பகுதியில் நடந்து சென்ற காட்சி பதிவாகி இருந்தது.

தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களிலும் சிறுமியை பற்றிய எந்த துப்பும் கிடைக்காததால் அவளது கதி என்ன? என்பது தெரியாமல் பெற்றோரும், உறவினர்களும் பதற்றமடைந்தனர். மாயமான சிறுமியை கண்டுபிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் தேடுதல் வேட்டை நடத்தினர்.

இந்த நிலையில் மாயமான சிறுமியின் வீட்டில் இருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் இருக்கும் சாக்கடை கால்வாயில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதைத்தொடர்ந்து போலீசார் அங்கு விரைந்து சென்று சாக்கடை கால்வாயில் தேடினார்கள். அப்போது வேட்டியால் சுற்றப்பட்டு அழுகிய நிலையில் சிறுமியின் உடல் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சாக்கடைக்குள் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் சிறுமியின் உடலை சாக்கடையில் இருந்து வெளியே மீட்டனர். இறந்து 3 நாட்கள் ஆனதால் அழுகி துர்நாற்றம் வீசியது. சம்பவத்தன்று தெருவில் விளையாடிக்கொண்டு இருந்த சிறுமியை, கும்பல் நோட்டமிட்டு மறைவான பகுதிக்கு கடத்திச் சென்று கை, காலை கட்டி கொலை செய்துள்ளனர். அதை மறைக்க வேட்டியால் உடலை சுற்றி கட்டி, சாக்கடை கால்வாயில் வீசி இருக்கலாம் என தெரிகிறது.

சாக்கடையில் இருந்து சிறுமியின் உடல் கை, கால் கட்டப்பட நிலையில் மீட்கப்பட்ட தகவல் காட்டுத்தீ போல் பரவியது. மேலும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. சிறுமியை கடத்தி கொடூரமாக கொன்று உடலை சாக்கடையில் வீசியது ஏன்? பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டாளா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.


Next Story