பயங்கரவாதி வைத்திருந்த ஆதார் கார்டின் சொந்தக்காரர் ரெயில்வே ஊழியர்


பயங்கரவாதி வைத்திருந்த ஆதார் கார்டின் சொந்தக்காரர் ரெயில்வே ஊழியர்
x
தினத்தந்தி 20 Nov 2022 6:45 PM GMT (Updated: 20 Nov 2022 6:45 PM GMT)

பயங்கரவாதி வைத்திருந்த ஆதார் கார்டின் சொந்தக்காரர் ரெயில்வே ஊழியர் என்ற விவரம் தெரியவந்துள்ளது. அவர் ஆதார் கார்டை 6 மாதங்களுக்கு முன்பே தவறவிட்டதாகவும் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

துமகூரு:

பயங்கரவாதி வைத்திருந்த ஆதார் கார்டின் சொந்தக்காரர் ரெயில்வே ஊழியர் என்ற விவரம் தெரியவந்துள்ளது. அவர் ஆதார் கார்டை 6 மாதங்களுக்கு முன்பே தவறவிட்டதாகவும் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

ஆட்டோவில் கிடந்த ஆதார் கார்டு

மங்களூரு ஆட்டோ வெடிப்பு சம்பவம் கர்நாடகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. வெடிகுண்டு விபத்து நடந்த ஆட்டோவில் இருந்து போலீசார் ஆதார்கார்டு ஒன்றை கைப்பற்றினர். அந்த ஆதார் கார்டை ஆட்டோவில் பயணித்த பயங்கரவாதி வைத்திருந்தார்.

அந்த ஆதார் கார்டில் பிரேம் ராஜ் ஹுடகி, கர்நாடக மாநிலம் தார்வார் மாவட்டம் உப்பள்ளி என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனால் பயங்கரவாதியின் பெயர் பிரேம்ராஜ் ஹுடகி என போலீசார் கருதினர். எனவே அதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

ரெயில்வே ஊழியருக்கு சொந்தமானது

அதில், அந்த ஆதார் கார்டு உப்பள்ளியை சேர்ந்த பிரேம்ராஜ் ஹுடகி என்பவருக்கு சொந்தமானது என்பதும், ஆட்டோவில் பயணித்த பயங்கரவாதிக்கு சொந்தமானது அல்ல என்ற தகவலும் தெரியவந்தது.

அதாவது உப்பள்ளியை சேர்ந்த பிரேம் ராஜ் ஹுடகி கர்நாடக மாநிலம் துமகூருவில் ரெயில்வே ஊழியராக வேலை பார்த்து வருவதும், இதற்காக இவர் துமகூரு ஹிரெஹள்ளியில் வாடகை வீட்டில் தங்கியிருந்து வருவதும் தெரியவந்தது.

இதையடுத்து அவரை போலீசார் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்தனர். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், குக்கர் குண்டு வெடித்த ஆட்டோவில் கிடந்த ஆதார்கார்டு ரெயில்வே ஊழியரான பிரேம்ராஜ் ஹுடகிக்கு சொந்தமானது என்பதும், அவர் கடந்த 2 ஆண்டுகளில் இரு முறை ஆதார் கார்டுகளை தொலைத்திருந்த விவரமும் தெரியவந்தது.

அதாவது கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சொந்த ஊரான உப்பள்ளிக்கு சென்றிருந்த போது தவற விட்டது தெரியவந்தது. ஏற்கனவே இதுபோல் அவர் தார்வாரில் இருந்து பெலகாவிக்கு பஸ்சில் சென்ற போது ஒரு ஆதார் கார்டை தொலைத்திருந்ததும், அவர் தொலைத்த ஆதார் கார்டை பயன்படுத்தி பயங்கரவாதி மங்களூருவில் ஆட்டோவில் ஏறி சென்று பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்ட திடுக்கிடும் தகவலும் தெரியவந்தது.

போலீசில் வாக்குமூலம்

இருப்பினும் பிரேம்ராஜ் ஹுடகியிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுதொடர்பாக பிரேம்ராஜ் ஹுடகி நிருபர்களிடம் கூறியதாவது:-

மங்களூரு ஆட்டோவில் வெடிகுண்டு வெடித்தது தொடர்பாக நேற்று (நேற்று முன்தினம்) இரவே சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. அலோக்குமார் என்னை தொடர்பு கொண்டு, துமகூரு போலீஸ் சூப்பிரண்டுவை சந்தித்து பேசும்படி கூறினார். அதன்படி அவர் முன்னிலையில் நான் ஆஜராகி குண்டு வெடிப்பு நடந்த ஆட்டோவில் சிக்கிய ஆதார் கார்டு தொடர்பாக எனக்கு தெரிந்த தகவல்களை போலீசாரிடம் வாக்குமூலமாக தெரிவித்தேன்.

அந்த ஆதார் கார்டு என்னுடையது தான். அது கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பஸ்சில் சென்ற போது தவறவிட்டது பற்றியும், அந்த ஆதார் கார்டை தான் பயங்கரவாதி பயன்படுத்தி இருப்பதாகவும் தெரிவித்துள்ளேன். எனக்கும், இந்த வெடிகுண்டு சம்பவத்துக்கும் தொடர்பு இல்லை என்பதை போலீசாரிடம் தெரிவித்துள்ளேன். மேலும் எனது வீட்டில் நேற்று இரவே போலீசார் சோதனை நடத்தினர். போலீசார் கேட்கும் தகவல்களை நான் கூறிவருகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

திட்டமிட்ட சதி

இதன் மூலம் பயங்கரவாதி மங்களூருவில் பயங்கரவாத செயலை அரங்கேற்ற திட்டமிட்டதும், போலீசாரிடம் தனது விவரம் தெரியாமல் இருக்கவும், போலீசாரை குழப்பம் அடைய செய்யவும் ரெயில்வே ஊழியரான பிரேம்ராஜ் ஹுடகி தவறவிட்ட ஆதார் கார்டை பயன்படுத்தி திசைதிருப்ப திட்டமிட்ட சதி அம்பலமாகியுள்ளது. இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.


Next Story