டெல்லியில் மக்களவை தேர்தலில் போட்டியிடும் ஆம் ஆத்மி வேட்பாளர்கள் அறிவிப்பு


டெல்லியில் மக்களவை தேர்தலில் போட்டியிடும் ஆம் ஆத்மி வேட்பாளர்கள் அறிவிப்பு
x

டெல்லியில் மொத்தம் உள்ள 7 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி 4 இடங்களிலும், காங்கிரஸ் 3 இடங்களிலும் போட்டியிட உள்ளது.

புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தல் நடப்பு ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெற கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தலைமையில் இந்தியா கூட்டணி தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன. இந்தியா கூட்டணியில் முக்கிய அங்கம் வகிக்கும் காங்கிரஸ் அடுத்தடுத்து கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு செய்து வருகிறது.

இதையடுத்து டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி – காங்கிரஸ் கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு உறுதியானது. டெல்லியில் மொத்தம் உள்ள 7 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி 4 இடங்களிலும், காங்கிரஸ் 3 இடங்களிலும் போட்டியிட முடிவு செய்துள்ளதாகவும், அரியானாவில் 9 இடங்களில் காங்கிரசும் ஒரு இடத்தில் ஆம் ஆத்மியும் போட்டியிட உள்ளதாக அதிகாரபூர்வமாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்திருந்தது.

அதன்படி, ஆம் ஆத்மி கட்சியானது புதுடெல்லி, மேற்கு டெல்லி, தெற்கு டெல்லி மற்றும் கிழக்கு டெல்லி என 4 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சியானது சாந்தினி சவுக், வடகிழக்கு மற்றும் வடமேற்கு என 3 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளதாக காங்கிரஸ் கட்சி பொது செயலாளர் மற்றும் எம்.பி.யான முகுல் வாஸ்னிக் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், டெல்லி, அரியானா ஆகிய மாநிலங்களில் மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர் பட்டியலை இன்று ஆம் ஆத்மி வெளியிட்டுள்ளது. அதன்படி, புதுடெல்லியில் சோம்நாத் பார்தி, கிழக்கு டெல்லியில் குல்தீப் குமார், தெற்கு டெல்லியில் சாஹி ராம் பெஹல்வான், மேற்கு டெல்லியில் மகாபல் மிஸ்ரா , அரியானாவில் குருஷேத்ரா தொகுதியில் சுஷில் குப்தா ஆகியோர் போட்டியிடுவதாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.


Next Story