கெஜ்ரிவாலை தொடர்ந்து மாநில மந்திரிக்கும் போலீசார் நோட்டீஸ்


கெஜ்ரிவாலை தொடர்ந்து மாநில மந்திரிக்கும் போலீசார் நோட்டீஸ்
x

கோப்புப்படம்

குற்றச்சாட்டு தொடர்பாக பதிலளிக்குமாறு கெஜ்ரிவால் மற்றும் அதிஷிக்கு போலீசார் அனுப்பியுள்ள நோட்டீசில் கூறப்பட்டு உள்ளது.

புதுடெல்லி,

டெல்லி ஆம் ஆத்மி அரசை கவிழ்க்க பா.ஜனதா முயற்சிப்பதாக முதல்-மந்திரி கெஜ்ரிவால் சமீபத்தில் குற்றச்சாட்டு வெளியிட்டார். ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் 7 பேரிடம் தலா ரூ.25 கோடி பேரம் பேசப்பட்டதாக அவர் தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டு இருந்தார். இதைப்போல டெல்லி பெண் மந்திரி அதிஷியும் இந்த குற்றச்சாட்டை கூறினார்.

இதை திட்டவட்டமாக மறுத்த டெல்லி பா.ஜனதா தலைவர் வீரேந்தர் சச்தேவா, இது தொடர்பாக விசாரணை நடத்துமாறு டெல்லி போலீஸ் கமிஷனர் சஞ்சய் அரோராவை சந்தித்து மனு கொடுத்தார். இதைத்தொடர்ந்து இந்த குற்றச்சாட்டு தொடர்பாக எழுத்துப்பூர்வமாக பதிலளிக்குமாறு கெஜ்ரிவாலுக்கு டெல்லி குற்றப்பிரிவு போலீசார் நோட்டீஸ் அனுப்பினர்.

இந்த நோட்டீசுடன் நேற்று முன்தினம் அவரது வீட்டுக்கு சென்றனர். அங்கு அவர் இல்லாததால் வீட்டில் இருந்த அதிகாரிகளிடம் கொடுத்துவிட்டு போலீசார் திரும்பி சென்றனர். இது டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்த நிலையில் நேற்று டெல்லி மந்திரி அதிஷியின் வீட்டுக்கும் போலீசார் சென்றனர். பகல் 12.55 மணியளவில் சென்ற அவர்கள் ஆட்சிக்கவிழ்ப்பு குற்றச்சாட்டு தொடர்பாக பதிலளிக்குமாறு பிறப்பிக்கப்பட்ட நோட்டீசை எடுத்துச் சென்றனர்.அப்போது அங்கே மந்திரி அதிஷி இல்லை. எனவே அவரது ஊழியர்களிடம் போலீசார் இந்த நோட்டீசை வழங்கி விட்டு திரும்பினர்.முன்னதாக நேற்று காலையிலும் அதிஷி வீட்டுக்கு போலீசார் சென்றனர். ஆனால் அப்போதும் அதிஷி வீட்டில் இல்லாததால் நோட்டீசை வழங்காமல் அவர்கள் திரும்பி சென்றனர்.

ஆட்சிக்கவிழ்ப்பு குறித்து கூறியுள்ள குற்றச்சாட்டு தொடர்பாக 5-ந்தேதிக்குள் (இன்று) பதிலளிக்குமாறு கெஜ்ரிவால் மற்றும் அதிஷிக்கு போலீசார் அனுப்பியுள்ள நோட்டீசில் கூறப்பட்டு உள்ளது.

அதேநேரம் இந்த நோட்டீசில் சம்மன் குறித்தோ, வழக்குப்பதிவு குறித்தோ, இந்திய தண்டனை சட்டம், இந்திய குற்றவியல் சட்டம் என எது குறித்தும் போலீசார் குறிப்பிடவில்லை என ஆம் ஆத்மி தலைவர் ஜாஸ்மின் ஷா கூறியுள்ளார். இது வெறும் வெள்ளை காகிதத்தில் எழுதப்பட்ட ஒரு கடிதம் மட்டும்தான் என்றும் அவர் தெரிவித்தார்.

ஆட்சிக்கவிழ்ப்பு குற்றச்சாட்டு தொடர்பாக கெஜ்ரிவால் மற்றும் அதிஷி வீட்டுக்கு போலீசார் சென்ற சம்பவம் டெல்லி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடையே போலீசார் தங்கள் அரசியல் எஜமானர்களின் அழுத்தங்களால் இத்தகைய நாடகத்தில் ஈடுபடுவதாக அதிஷி குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், 'டெல்லி போலீசார் நேற்று (நேற்று முன்தினம்) டெல்லி முதல்-மந்திரிக்கு ஒரு நோட்டீஸ் வழங்கினார்கள். இன்று (நேற்று) எனக்கு நோட்டீஸ் அளித்தனர். ஆனால் அதில் வழக்குப்பதிவு குறித்து எதுவும் குறிப்பிடவில்லை. இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் நடைமுறைச்சட்டம், ஊழல் தடுப்பு சட்டம் அல்லது நிதி மோசடி தடுப்பு சட்டம் என எந்த சட்டத்தின் கீழ் நோட்டீஸ் வழங்கப்படுகிறது என்று எதுவும் குறிப்பிடவில்லை' என தெரிவித்தார்.


Next Story