முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் இன்று கர்நாடக அனைத்துக்கட்சி கூட்டம்


முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் இன்று கர்நாடக அனைத்துக்கட்சி கூட்டம்
x

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் இன்று (புதன்கிழமை) கர்நாடக அனைத்துக் கட்சி கூட்டம் நடக்கிறது. இதில் காவிரி நதிநீர் விவகாரத்தில் சட்டநிபுணர்களுடன் ஆலோசித்து முக்கிய முடிவு எடுக்கப்படுகிறது.

பெங்களூரு:

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் இன்று (புதன்கிழமை) கர்நாடக அனைத்துக் கட்சி கூட்டம் நடக்கிறது. இதில் காவிரி நதிநீர் விவகாரத்தில் சட்டநிபுணர்களுடன் ஆலோசித்து முக்கிய முடிவு எடுக்கப்படுகிறது.

தமிழக அரசு மனு

தமிழகம்-கர்நாடகம் இடையே காவிரி நீர் பிரச்சினை நீண்ட காலமாக உள்ளது. இந்த பிரச்சினையை தீர்க்க அமைக்கப்பட்ட காவிரி நடுவர் மன்றம் தீர்ப்பு வழங்கி தமிழகத்திற்கு 192 டி.எம்.சி.(ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கன அடி) நீர் ஒதுக்கீடு செய்தது. சுப்ரீம் கோர்ட்டு மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்து தமிழகத்திற்கான நீர் ஒதுக்கீட்டை 177.25 டி.எம்.சி.யாக குறைத்தது. கர்நாடகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக நல்ல மழை பெய்தது.

அதனால் கர்நாடகத்தில் காவிரி படுகையில் உள்ள 4 அணைகளும்(கிருஷ்ணராஜசாகர், ஹாரங்கி, ஹேமாவதி, கபினி) நிரம்பி தமிழகத்திற்கு அதிகளவில் உபரி நீர் சென்றது. அதனால் இரு மாநிலங்களுக்கு இடையே எந்த விதமான தண்ணீர் பிரச்ச்சினையும் ஏற்படவில்லை. ஆனால் நடப்பு ஆண்டில் காவிரி படுகையில் போதிய அளவுக்கு மழை பெய்யவில்லை. இதன்காரணமாக கே.ஆர்.எஸ்.(கிருஷ்ணராஜசாகர்) அணை முழுமையாக நிரம்பவில்லை. அதனால் தமிழகத்திற்கான காவிரி நீர் முழுமையாக திறக்கப்படவில்லை. இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு, ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் காவிரியில் தங்களுக்கான பங்கை திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிடக்கோரி மனு தாக்கல் செய்துள்ளது.

அனைத்துக்கட்சி கூட்டம்

குறிப்பாக குறுவை சாகுபடிக்கு காவிரி அணைகளில் இருந்து வினாடிக்கு 24 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கும்படி கர்நாடகத்திற்கு உத்தரவிடுமாறு மனுவில் கோரப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்திற்கு காவிரியில் சுமார் 22 ஆயிரம் கனஅடி அளவுக்கு நீர் திறக்கப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகளான பா.ஜனதா, ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. பா.ஜனதா மண்டியாவில் விவசாயிகளை திரட்டி போராட்டம் நடத்தியது. நடிகை சுமலதா எம்.பி.யும் போராட்டம் நடத்தினார். மண்டியா விவசாயிகள் நேற்றும் போராட்டம் நடத்தினர்.

போதிய மழை பெய்யாததால் இடர்பாடு சூத்திரத்தை பின்பற்ற வேண்டும் என்று கர்நாடகம் சொல்கிறது. கர்நாடக விவசாயிகளின் நலன் காக்க வேண்டும் என்பதால், தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்கக்கூடாது என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. மேலும் கர்நாடக அரசு தன்னிச்சையாக செயல்படுவதாகவும், அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட கூட்டவில்லை என்றும் குமாரசாமி குறை கூறி ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தினார். மேலும் சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடகம் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. இந்த நிலையில் காவிரியில் தமிழகத்திற்கு நீர் திறப்பது குறித்து கர்நாடக அனைத்துக்கட்சி கூட்டம் 23-ந் தேதி (இன்று) நடைபெறும் என்று துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் அறிவித்தார். அதன்படி கா்நாடக அனைத்துக்கட்சி கூட்டம் இன்று (புதன்கிழமை) காலை 11 மணிக்கு பெங்களூரு விதான சவுதாவில் உள்ள மாநாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது.

முக்கிய முடிவு

முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார், எதிர்க்கட்சி தலைவர்கள் குமாரசாமி, பசவராஜ் பொம்மை, முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா, ஜெகதீஷ் ஷெட்டர், சதானந்தகவுடா, முன்னாள் நீர்ப்பாசனத்துறை மந்திரிகள், எம்.பி.க்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள். இந்த கூட்டத்தில் காவிரி பிரச்சினையில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனு குறித்து விசாரிக்க தனி அமர்வு அமைக்கப்பட்டுள்ளது. அந்த அமர்வில் அந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விசாரணையின்போது கர்நாடகம் சார்பில் எந்த மாதிரியான அம்சங்களை எடுத்து வைப்பது என்பது குறித்தும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. மேகதாது திட்டம் குறித்தும் ஆலோசனை நடத்தப்படுகிறது.


Next Story