ஜல்னாவில் போலீஸ் தடியடியை கண்டித்து மராத்தா அமைப்பினர் பல இடங்களில் போராட்டம்


ஜல்னாவில் போலீஸ் தடியடியை கண்டித்து மராத்தா அமைப்பினர் பல இடங்களில் போராட்டம்
x
தினத்தந்தி 2 Sep 2023 11:15 PM GMT (Updated: 2 Sep 2023 11:15 PM GMT)

ஜல்னா தடியடி சம்பவத்தை கண்டித்து மாநிலத்தின் பல்வேறு இடங்களில் மராத்தா அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு போராட்டக்காரர்களை போலீசார் கலைத்தனர்.

போலீசார் தடியடி

ஜல்னா மாவட்டத்தில் அம்பாத் தாலுகா துலே- சோலாப்பூர் சாலையில் மனோஜ் ஜரங்கே தலைமையில் சிலர் மராத்தா இடஒதுக்கீடு கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் டாக்டர்களின் அறிவுறுத்தலின்பேரில், போலீசார் மனோஜ் ஜராங்கேவை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முயன்றனர். அப்போது போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே நடைபெற்ற தள்ளுமுள்ளுவின் காரணமாக போராட்டம் வெடித்தது. இதில் 14 வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன. இதையடுத்து போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் போராட்டக்காரர்களை கலைத்தனர்.

சாலை மறியல்

இந்த நிலையில் நேற்று போலீசார் தடியடி நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து மராத்தா அமைப்புகள் சார்பில் வாஷிம் மாவட்டம் ராஜ்குமார் சவுக்கில் நேற்று சாலை மறியல் நடத்தப்பட்டது. இதன்காரணமாக ஐதராபாத் - அகோலா நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் தடியடி நடத்திய போலீசாரை இடைநீக்கம் செய்ய வேண்டும், உள்துறை மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் பதவி விலக வேண்டும் என்ற என கோஷங்களை எழுப்பினர்.

கார், டயர் எரிப்பு

இதேபோல சம்பாஜிநகரில் (அவுரங்காபாத்) புலம்பரி தாலுகாவில் உள்ள சம்பாஜி நகர் - ஜல்காவ் நெடுஞ்சாலையில் பஞ்சாயத்து தலைவர் ஒருவர் தடியடிக்கு எதிர்ப்பு தெரிவித்து தனது காரை தீவைத்து எரித்தார். சோலாப்பூர் அக்கல்காட் பகுதியில் மராத்தா அமைப்பினர் சாலையில் டயரை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேபோல சோலாப்பூரில், துலே - சோலாப்பூர் நெடுஞ்சாலையில் மராத்தா அமைப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களை கலைக்க வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுதவிர யவத்மால், துலே, பீட், பர்பானி உள்ளிட்ட பல மாவட்டங்களில் மராத்தா அமைப்பினர் மீது போலீசார் நடத்திய தடியடியை கண்டித்து போராட்டம் நடந்தது.

360 பேர் மீது வழக்கு

இந்த நிலையில் ஜல்னா மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு துஷார் தோஷி கூறுகையில், " வன்முறையில் கிட்டத்தட்ட 40 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களை கலைக்க பிளாஸ்டிக் தோட்டாக்கள் மற்றும் கண்ணீர் புகை குண்டுகள் பயன்படுத்தப்பட்டன. தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது. வன்முறை தொடர்பாக ஜல்னாவில் உள்ள கோண்டி போலீஸ் நிலையத்தில் சுமார் 360 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது" என்றார்.

உயர்மட்ட விசாரணை குழு

இந்த சம்பவத்திற்கு தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார், காங்கிரஸ் மாநில தலைவர் நானா பட்டோலே கடும் கண்டனம் தெரிவித்தனர்.

மாநில முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே அப்பகுதி மக்கள் அமைதி காக்கும்படி வேண்டுகோள் விடுத்தார். வன்முறை குறித்து உயர்மட்ட விசாரணை குழு அமைக்கப்படும் என அறிவித்தார்.


Next Story