காவிரி அணைகளை ஆராய நிபுணர் குழு அமைக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு தேவேகவுடா கடிதம்


காவிரி அணைகளை ஆராய நிபுணர் குழு அமைக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு தேவேகவுடா கடிதம்
x

காவிரி அணைகளின் உண்மை நிலை குறித்து ஆராய நிபுணர் குழுவை உடனடியாக அமைக்க வேண்டும் என்று கோரி பிரதமர் மோடிக்கு தேவேகவுடா கடிதம் எழுதியுள்ளார்.

பெங்களூரு:

கர்நாடக அணைகளில் போதிய அளவு நீர் இருப்பு இல்லாத நிலையில் தமிழகத்திற்கு காவிரி நீர் திறந்துவிடப்படுவதை கண்டித்து கர்நாடக விவசாயிகள், கன்னட அமைப்பினர், பா.ஜனதா, ஜனதாதளம் (எஸ்) கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன.

இந்த நிலையில் காவிரி விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு முன்னாள் பிரதமரும், ஜனதாதளம் (எஸ்) கட்சி தேசிய தலைவருமான தேவேகவுடா நேற்று ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தின் நகலை தேவேகவுடா தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை சரியாக பெய்யவில்லை. இதனால் விவசாயிகள் கஷ்டத்தில் உள்ளனர். கர்நாடகத்தில் உள்ள காவிரி அணைகளில் தற்போது 51.10 டி.எம்.சி. (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) நீர் தான் உள்ளது. ஆனால் குடிநீர் மற்றும் பாசனத்திற்கு 112 டி.எம்.சி. நீர் தேவைப்படுகிறது. தமிழகத்திற்கு ஏற்கனவே 40 டி.எம்.சி. நீர் திறக்கப்பட்டுள்ளது.

ஆனாலும் இன்னும் நீர் வேண்டும் என்று அந்த மாநிலம் கேட்கிறது. இது நியாயமற்றது. இயற்கை நியதிக்கு முரணானது. காவிரி அணைகளில் உள்ள நீர் இருப்பு குறித்து ஆராய சம்பந்தப்பட்ட மாநிலங்கள் மற்றும் மத்திய அரசின் அதிகாரிகளை உள்ளடக்கிய ஒரு குழுவை உடனடியாக அமைக்க வேண்டும் என்று ஜல்சக்தித்துறைக்கு உத்தரவிட வேண்டும்.

அந்த குழு காவிரி அணைகளை நேரில் பார்வையிட்டு உண்மை நிலை அடங்கிய அறிக்கையை காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங்காற்று குழுவில் தாக்கல் செய்ய வேண்டும். அதை ஆணைய அதிகாரிகள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். மேலும் இடர்பாட்டு சூத்திரத்தை வகுக்கவும் அந்த குழுவுக்கு உத்தரவிட வேண்டும். இது மட்டுமின்றி சம்பந்தப்பட்ட மாநிலங்களை சாராத 5 அதிகாரிகளை உள்ளடக்கிய ஒரு நிபுணர் குழுவை அமைக்க வேண்டும்.

அந்த குழுவும் காவிரி அணைகளின் நிலையை ஆராய்ந்து சுப்ரீம் கோர்ட்டு, காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு அறிக்கை வழங்க வேண்டும். காவிரி ஒழுங்காற்று குழு, ஆணைய அதிகாரிகள் 15 நாட்களுக்கு ஒரு முறை காவிரி அணைகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ய உத்தரவிட வேண்டும். காவிரி படுகையில் கர்நாடகம் மேல் பகுதியில் இருப்பது ஒரு சாபம்.

இவ்வாறு அதில் தேவேகவுடா குறிப்பிட்டுள்ளார்.


Next Story